''200 கோடி ஜீவனாம்சம் தேவையில்லை'' – நாக சைதன்யாவைப் பிரிந்தார் நடிகை சமந்தா!

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வந்த நாகசைதன்யா – சமந்தா பிரிவு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமந்தா, நாக சைதன்யா இருவருமே இன்று மதியம் இன்ஸ்டாகிராமில் தனித்தனியாக தாங்கள் கணவன் – மனைவி என்கிற குடும்ப உறவில் இருந்து பிரிந்து செல்வதாக அறிவித்திருக்கிறார்கள். இருவரின் அறிக்கையிலும் பெயர் மட்டுமே மாறி இருந்ததே தவிர வார்த்தைகளில் எந்த மாற்றமும் இல்லை.

சமந்தா சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர். ‘மாஸ்கோவின் காவேரி’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். ஆனால், இந்தப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே கெளதம் வாசுதேவ் மேனன் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் இயக்கிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடத்தார். தமிழில் சிம்பு – த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் நாக சைதன்யா – சமந்தா நடித்தனர். இது நாக சைதன்யா, சமந்தா இருவருக்குமே இரண்டாவது படம்.

சமந்தா – நாக சைதன்யா

நாக சைதன்யா தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் முதல் மகன். இரண்டாவது பட நாயகியான சமந்தாவோடு நல்ல நட்போட பழக ஆரம்பித்தார் சைதன்யா. ‘மனம்’, ‘ஆட்டோநகர் சூர்யா’, ‘மஜிலி’ என இருவரும் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்துவந்த நிலையில் நட்பு காதலானது. இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என இரண்டு ஆண்டுகளாக கிசுகிசுக்கப்பட்டு இறுதியாக 2017-ல் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். ஆனால், நான்கு வருட திருமண வாழ்க்கை எதிர்பாராத வகையில் இப்போது விவாகரத்துக்கு வந்திருக்கிறது.

ட்விட்டரில் ‘சமந்தனா அகினேனி’ என இருந்த பெயரை வெறும் ‘S’ என சமந்தா மாற்றியதில் இருந்தே இருவரும் பிரியப்போகிறார்கள் என்கிற செய்தி பரவ ஆரம்பித்தது. மீடியாக்கள் இதுகுறித்து கேட்டபோது இருவரும் அதற்கான பதிலை நேரடியாக தரவில்லை.

சமந்தா – நாக சைதன்யா

ஐதரபாத்தில் சமந்தா தன் பெயரில் வாங்கிய வீட்டில்தான் திருமணத்துக்குப்பிறகு இருவரும் குடியிருந்தனர். ஆனால், கடந்த லாக்டெளனின்போது நாகசைத்தன்யா இந்த வீட்டில் இருந்து பிரிந்து தன்னுடைய சொந்த வீட்டுக்கு சென்றுவிட்டதாக சொல்லப்பட்டது. இருவரையும் சேர்த்துவைக்கப் பலரும் முயன்று முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில் ஜீவனாம்சம் குறித்து பேச்சுகள் ஆரம்பித்திருக்கின்றன. நாகார்ஜுனா குடும்பம் சமந்தாவுக்கு 200 கோடி ரூபாய் வரை ஜூவனாம்சாகத் தர முன்வந்திருக்கிறது. ஆனால், ‘’நான் நன்றாக சம்பாதிக்கிறேன். எனக்கு எந்த பண உதவியும் வேண்டாம்’’ என மறுத்திருக்கிறார் சமந்தா.

இருவரின் விவாகரத்து வழக்கு விரைவில் நீதிமன்றத்துக்கு வர இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.