தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணி அபாரம்

ஆர்ஹஸ்,

தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான தாமஸ் கோப்பை போட்டியில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இதன் லீக் சுற்றில் ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் நெதர்லாந்தை சந்தித்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 5-0 என்ற கணக்கில் நெதர்லாந்தை தோற்கடித்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த் 21-12, 21-14 என்ற நேர்செட்டில் ஜோரன் வீகெலையும் (நெதர்லாந்து), சாய் பிரனீத் 21-4, 21-12 என்ற நேர்செட்டில் ராபின் மெஸ்மனையும், சமீர் வர்மா 21-6, 21-11 என்ற நேர்செட்டில் கிஜிஸ் துஜிஸ்சையும் வீழ்த்தினார்கள். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி இணை 21-19, 21-12 என்ற நேர்செட்டில் ரூபென் ஜிலி-டிஸ் வான்டெர் ஜோடியையும், எம்.ஆர்.அர்ஜூன்-துருவ் கபிலா ஜோடி 21-12, 21-13 என்ற நேர்செட்டில் ஆன்டி புஜிக்-பிரையன் வாஸ்சிங் இணையையும் தோற்கடித்தன. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி தஹிதியை எதிர்கொள்கிறது. பெண்கள் பிரிவில் முதல் ஆட்டத்தில் ஸ்பெயினை வீழ்த்தி இருந்த இந்திய அணி இன்று ஸ்காட்லாந்துடன் மோதுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.