கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு சட்டமூலங்களை கௌரவ சபாநாயகர் சான்றுரைப் படுத்தினார்

பாராளுமன்றத்தில் கடந்த 07ஆம் திகதி விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம், ஊழியர் சகாய நிதிய (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றை கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (13) முற்பகல் சான்றுரைப்படுத்தினார்.

ஊழியர் சகாய நிதிய (திருத்தச்) சட்டமூலத்தின் ஊடாக இந்தியாவில் பணிபுரியும் இலங்கையர்கள் 58 வயது நிரம்புவதற்கு முன்னர் சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு பங்களிப்பு செய்த நிதியை பெற்றுக்கொள்ளும் வகையில் தேவையான திருத்தகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் இந்தியாவில் பணிபுரியும் இலங்கையர்கள் அந்நாட்டு சட்ட திட்டங்களுக்கு அமைய கட்டாயமாக இந்திய சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு பங்களிப்பு செய்ய வேண்டும். எனினும் அவர்கள் அந்நாட்டில் பணியாற்றிவிட்டு மீண்டும் நாடு திரும்பும் போது  சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு பங்களிப்பு செய்த நிதியை பெற்றுக்கொள்ள 58 வயது நிரம்பும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

அத்துடன், தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலத்தின் ஊடாக 18 வயதைப் பூர்த்திசெய்த நபர்கள் விரைவில் வாக்களிப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கும். இதற்கு முன்னர் 1980 ஆம் ஆண்டு 44 இலக்க தேருநர்களைப் பதிவுசெய்தல் சட்டத்துக்கு அமைய, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் முதலாம் திகதி 18 வயதை பூர்த்தி செய்த நபர்களே தேருநர்களாக பதிவு செய்யப்படுகின்றனர். எனினும், அத்தினத்துக்குப் பின்னர் பிறந்த தினத்தை கொண்ட இளையோருக்கு அடுத்த வருடத்தின் மே மாதம் 31 ஆம் திகதிக்குப் பின்னர் இடம்பெறும் தேர்தலிலேயே வாக்குரிமை கிடைக்கின்றது. இந்த நிலைமையை மாற்றும் நோக்கில் இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கமைய 2021ஆம் ஆண்டு 22ஆம் இலக்க தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டம் மற்றும் 2021ஆம் ஆண்டு 23ஆம் இலக்க ஊழியர் சகாய நிதிய (திருத்தச்) சட்டமூலம் என்பன இன்று (13) முதல் நடைமுறைக்கு வரும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.