சுகேஷ் சந்திரசேகர் மீதான ரூ.200 கோடி பண மோசடி விவகாரம்: பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர்

தொழிலதிபரின் மனைவியை ஏமாற்றி பண மோசடி செய்ததில் ஈடுபட்ட குற்றவாளியோடு தொடர்புடையதாகக் கூறப்படும் பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா ஃபதேஹி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி நோரா ஃபதேஹி இன்று அமலாக்கத்துறை முன் நேரில் ஆஜரானார்.

தொழிலதிபரின் மனைவியை ஏமாற்றி, மிரட்டி, 200 கோடி ரூபாய் பணம் பறித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் மீது டெல்லி காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு (இஓடபிள்யூ) எஃப்ஐஆர் பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறை பல்வேறு இடங்களிலும் சோதனைகளைச் செய்து வருகிறது.

அரசியல் செல்வாக்கு தனக்கு உள்ளதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஏற்கெனவே அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2017-ல் கைது செய்து, திஹார் சிறையில் அடைத்தனர். அவர் மீது 21-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக டெல்லி அமலாக்கத் துறையினர் புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், ஐபோன் மூலமாக பல ஒப்பந்தங்களை முடித்துக் கொடுப்பதாகக் கூறி, டெல்லி தொழிலதிபர்களிடம் ரூ.200 கோடி வரை பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. டெல்லி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிராக மீண்டும் ஒரு வழக்கைப் பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் வெளியில் இருந்து உதவிய இருவரைக் கைது செய்தனர்.

மேலும் அவரது செல்போனைப் பறிமுதல் செய்து சைபர் ஆய்வகக் கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சுகேஷ் சந்திரசேகருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆகஸ்ட் மாதத்தில், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சுகேஷ் சந்திரசேகருக்குச் சொந்தமான வீட்டில் டெல்லி அமலாக்கத் துறையைச் சேர்ந்த 16 பேர் கொண்ட அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 7 நாட்களாக இந்த சோதனை நடைபெற்றது. இதில் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.70 கோடி மதிப்பிலான 16 சொகுசு கார்களைப் பறிமுதல் செய்தனர். ஒரு லேப்டாப் மற்றும் கணக்கில் காட்டப்படாத ரூ.60 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். அவரது வீட்டுக்கும் சீல் வைத்துள்ளனர். சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரைக் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பாலிவுட் நடிகைகளிடம் விசாரணை

இந்நிலையில், தொழிலதிபர் மனைவியிடம் பண மோசடி வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகைககள் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக அமலாக்க இயக்குநரகம் (ED) சம்மன் அனுப்பியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடிகை மற்றும் நடனக் கலைஞரான நோரா ஃபதேஹி வியாழக்கிழமை சட்ட அமலாக்க முகவர் முன் ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்பட்ட நிலையில், பெர்னாண்டஸ் நாளை (அதாவது வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்ட அமலாக்க நிறுவனத்தால் தொடங்கப்பட்ட விசாரணைக்கு நேரில் ஆஜராக நோரா ஃபதேஹி அமலாக்கத்துறை அலுவலகத்தைச் சென்றடையும் படங்களை ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.