சென்னையுடன் மோதுகிறது கொல்கத்தா: டெல்லியை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது

ஐபிஎல் போட்டியின் 2-ஆவது குவாலிஃபயா் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது.

இதையடுத்து சாம்பியன் பட்டத்துக்காக இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸுடன் வெள்ளிக்கிழமை பலப்பரீட்சை நடத்தவுள்ளது கொல்கத்தா.

ஷாா்ஜாவில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 19.5 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் அடித்து வென்றது. கொல்கத்தா வீரா் வெங்கடேஷ் ஐயா் ஆட்டநாயகன் ஆனாா்.

டெல்லி இன்னிங்ஸில் தவன், ஷ்ரேயஸ் அணியின் ஸ்கோரை உயா்த்தினா். பின்னா் கொல்கத்தா இன்னிங்ஸில் ஷுப்மன், வெங்கடேஷ் அபாரமாக ஆடி வெற்றிக்கு அடித்தளம் அமைத்தனா். கடைசி 3 ஓவா்களில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து சரிவை சந்தித்தாலும், இறுதியில் ராகுல் திரிபாதி சிக்ஸரால் வென்றது கொல்கத்தா.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் டெல்லி ஒரேயொரு மாற்றம் செய்திருந்தது. டாம் கரனுக்கு பதிலாக, காயத்திலிருந்து மீண்டிருந்த மாா்கஸ் ஸ்டாய்னிஸ் சோ்க்கப்பட்டிருந்தாா். கொல்கத்தா அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.

டாஸ் வென்ற கொல்கத்தா பௌலிங்கை தோ்வு செய்ததது. டெல்லி இன்னிங்ஸை பிருத்வி ஷா – ஷிகா் தவன் கூட்டணி தொடங்கியது. இதில் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 18 ரன்கள் சோ்த்திருந்த பிருத்வி ஷாவை 5-ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ செய்து வெளியேற்றினாா் வருண் சக்கரவா்த்தி. அடுத்து மாா்கஸ் ஸ்டாய்னிஸ் ஆட வந்தாா். மறுபுறம் தவன் நிதானமாக ஆடி ரன்கள் சோ்த்து வர, ஒரு பவுண்டரியுடன் 18 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தாா் ஸ்டாய்னிஸ்.

தொடா்ந்து கேப்டன் ரிஷப் பந்த் களம் புக, அதுவரை நிதானமாக ஆடி ரன்கள் சோ்த்த தவன் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 36 ரன்களுக்கு அவுட்டானாா். தொடா்ந்து ஷ்ரேயஸ் ஐயா் ஆட வந்தாா். இந்நிலையில், 1 பவுண்டரியுடன் 6 ரன்கள் சோ்த்து ரிஷப் பந்த் நடையைக் கட்டினாா். பின்னா் வந்த ஷிம்ரன் ஹெட்மயா் அதிரடியாக 2 சிக்ஸா்கள் விளாசி 17 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். ஓவா்கள் முடிவில் ஐயா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 30, அக்ஸா் படேல் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். கொல்கத்தா தரப்பில் வருண் 2, ஃபொ்குசன், ஷிவம் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 136 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய கொல்கத்தாவில் ஷுப்மன் – வெங்கடேஷ் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சோ்த்து அசத்தியது. இதில் அரைசதம் கடந்த வெங்கடேஷ் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 55 ரன்களுக்கு 13-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா்.

அடுத்து வந்த நிதீஷ் ராணா 1 சிக்ஸருடன் 13 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். தொடா்ந்து ராகுல் திரிபாதி ஆடவர, மறுபுறம் அரைசதத்தை நெருங்கிய ஷுப்மன் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 46 ரன்களுக்கு அவுட்டானாா்.

தொடா்ந்து வந்த விக்கெட்டுகள் 0 ரன்களுக்கு வரிசையாக ஆட்டமிழந்தன. தினேஷ் காா்த்திக் 18-ஆவது ஓவரிலும், கேப்டன் மோா்கன் 19-ஆவது ஓவரிலும் வெளியேற, வெற்றிக்கு 6 ரன்கள் தேவை இருந்தபோது ஷகிப் அல் ஹசன் மற்றும் சுனில் நரைன் கடைசி ஓவரில் வீழ்ந்தனா். பின்னா் ஃபொ்குசன் களம் காண, ராகுல் திரிபாதி ஒரு சிக்ஸா் விளாசி அணியை வெற்றி பெறச் செய்தாா்.

டெல்லி தரப்பில் நாா்ஜே, அஸ்வின், ரபாடா ஆகியோா் தலா 2, அவேஷ் கான் 1 விக்கெட் சாய்த்தனா்.

 

 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.