மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: பிரதமர் மோடி டுவீட்

டெல்லி, அக். 14–

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மன்மோகன் சிங் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

சீராக உள்ளது

இந்நிலையில், அவர் காய்ச்சல் காரணமாகவே அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளது என்றும், அவருக்கு தேவையான ஊட்டச்சத்து, திரவ உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

89 வயதான மன்மோகன் சிங், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், அவரது உடல்நிலை சீராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைந்து நல்ல உடல்நலம் பெற பிரார்த்திக்கிறேன்”, என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.