ஒரு எம்.பி., 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி; காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் கை கொடுத்த தமிழகம்: கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட நிர்வாகிகள் உற்சாகம்

தமிழகத்தில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வென்றதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு தமிழக வாக்காளர்கள் மீண்டும் கை கொடுத்துள்ளனர்.

2004 முதல் 2014 வரை இந்தியாவை ஆண்ட காங்கிரஸ், கடந்த 2014-ல் பாஜகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது. அதன்பிறகு, தான்ஆட்சி செய்த மாநிலங்கள் பலவற்றையும் இழந்தது. 2019-ம் ஆண்டுமக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெறமுடியவில்லை. நேரு குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் ராகுல் காந்தி தோல்வி அடைந்தார்.

தொடர் தோல்வியால் இந்திய அளவில் சோர்வடைந்திருந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் கேரளத்தை அடுத்து அதிக எண்ணிக்கையில் புதுச்சேரி உட்பட 9 எம்பி.க்களை கொடுத்தது தமிழகம். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கர்நாடகம், மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.

தற்போது நடைபெற்ற 5 மாநிலசட்டப்பேரவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் காங்கிரஸ் ஓரிடத்தில்கூட வெல்ல முடியவில்லை. அசாம்,கேரளத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் கனவு தகர்ந்தது. புதுச்சேரியில் ஆட்சியை இழந்தது. இப்படி 4 மாநிலங்களில் காங்கிரஸுக்கு பலத்த அடி கொடுத்த நிலையில் தமிழகம் மீண்டும் அக்கட்சிக்கு கை கொடுத்துள்ளது.

திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 18இடங்களில் வென்று அசத்தியுள்ளது. 2011, 2016 தேர்தல் முடிவுகள், 2020 பிஹார் தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டு காங்கிரஸுக்கு அதிக இடங்களைக் கொடுத்தால் வெற்றி பெறாது என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்தத் தேர்தல்முடிவுகள் மூலம் அந்த விமர்சனம் தகர்க்கப்பட்டுள்ளது.

விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல், நாங்குநேரி, தென்காசி, வைகுண்டம், திருவாடானை, சிவகாசி, காரைக்குடி, அறந்தாங்கி ஆகிய தென் மாவட்டங்களில் மட்டுமல்லாது, மயிலாடுதுறை, விருத்தாசலம், உதகமண்டலம், ஈரோடுகிழக்கு, சோளிங்கர், பெரும்புதூர், வேளச்சேரி, பொன்னேரி என்று தமிழகம் முழுவதும் பரவலாக வென்று தமிழகத்தில் தனதுசெல்வாக்கை காங்கிரஸ் நிரூபித்துள்ளது. 18 பேரவைத் தொகுதிகள் மட்டுமல்லாது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இது அகில இந்திய அளவில் காங்கிரஸுக்கு முக்கியமான வெற்றியாகும்.

இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் உற்சாகமடைந்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.