கரோனா காலத்தில் இணை நோய்களால் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை: கரோனா காலத்தில் இணை நோய்களால் உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழ்களை  நிபுணர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்குரைஞர் ஸ்ரீராஜலட்சுமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், கரோனாவால் பலியாகும் நபர்களுக்கு, கரோனா மரணம் என இறப்பு சான்றிதழ்களில் குறிப்பிடப்படுவது இல்லை. இதனால் இவர்களுக்கு மத்திய மாநில அரசுகளின்  நிவாரண உதவிகள் மறுக்கப்பட்டுள்ளது. 

சக வழக்குரைஞரான கண்ணன் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், அவர் மூச்சுத்திணறல் காரணமாக இறந்ததாக இறப்புச் சான்று வழங்கப்பட்டுள்ளது. கரோனா மரணம் என இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்படாததால், பெற்றோரை இழந்த குழந்தைகள், குடும்பத்தினருக்கு அரசின் நிதியுதவி கிடைப்பது தடைப்படுவதாக கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கரோனா மரணங்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை என நாடு முழுவதும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை, கரோனா தொற்று உறுதி சான்றிதழ் இல்லாவிட்டால், அதனை கரோனா மரணங்கள் என பதிவு செய்யப்படுவது இல்லை. மரணம் குறித்த தெளிவான பதிவுகள் இருந்தால் தான், எதிர்காலத்தில் நோய்த் தொற்று பரவலை சமாளிப்பது குறித்து ஆய்வு செய்ய முடியும். இறப்புகளை துல்லியமாக குறிப்பிடுவது, நிவாரணம் வழங்க உதவியாக இருக்கும்.

இணை நோய்களின் பாதிப்பு உடையவர்களும் கரோனாவுக்கு பலியாகியுள்ளதால்,  கரோனா காலத்தில் வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழ்களை நிபுணர் குழுவை கொண்டு தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என  நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

மேலும் இது தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்த ஆரம்பகட்ட அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூன் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.