சென்னை: பத்து ரூபாயால் துப்பு துலங்கிய திருட்டு வழக்கு… நம்பிக்கைத் துரோகம் செய்த தம்பதி!

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் சிவசங்கர் நகர், தண்டு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் துரை (38). இவர் 7.6.2021-ல் சங்கர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, “ நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். 9.5.2021-ல் என்னுடைய அம்மா இறப்பு சம்பந்தமான காரியத்துக்குச் செல்வதற்காக நானும் எனது அக்கா மகன் சுபாஷும் வீட்டிலிருந்து தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினோம். அப்போது வழக்கமாக வீட்டு சாவியை கொடுக்கும் பிரேமா என்பவர் வீட்டில் இல்லாததால் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் நந்தினியிடம் சாவியை கொடுத்து பிரேமா வந்தவுடன் சாவியைக் கொடுத்துவிடுமாறு சொல்லிவிட்டு புறப்பட்டோம்.

நந்தினி

அதன்பிறகு 6.6.21-ம் அன்று மதியம் ஒரு மணியளவில் வீட்டுக்கு வந்து பீரோவைத் திறந்து பார்த்தபோது அதிலிருந்த 3 சவரன் தங்க நகைகள், கொலுசு 250 கிராம், சீட்டு பணம் 84,000 ரூபாய் ஆகியவற்றைக் காணவில்லை. எனவே அதைக் கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன். எனக்கு நந்தினி அவரின் கணவர் உமா சங்கர் மீது சந்தேகமாக உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரித்தார். நந்தினியிடமும் அவரின் கணவர் உமா சங்கரிடமும் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர்கள் இருவரும் தங்களின் குழந்தைகள் மீது சத்தியம் செய்து நாங்கள் திருடவில்லை என்று கூறினர். அதனால் இருவரையும் போலீஸார் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.

காட்டிக் கொடுத்த பத்து ரூபாய் நோட்டு

இந்தநிலையில் திருட்டுப்போன 84,000 ரூபாய் பணத்தில் பத்து ரூபாய் நோட்டில் 4500 என்று எழுதி அதில் தன்னுடைய கையெழுத்தை போட்டு வைத்திருந்தேன் என போலீஸாரிடம் துரை ஒரு தகவலைத் தெரிவித்தார். தன்னுடைய வீட்டில் பணம் நகைகள் திருட்டு போனது தொடர்பாக நண்பர்களிடமும் துரை தகவல் கூறியிருந்தார். இந்தச் சமயத்தில் பொழிச்சலூர் பகுதியில் கள்ளச்சந்தையில் விற்ற மதுபானத்தை நந்தினியின் கணவர் உமாசங்கர் வாங்கியிருக்கிறார். அப்போது அவர் கொடுத்த பணத்தில் பத்து ரூபாய் நோட்டில் துரையின் கையெழுத்து இருந்தது. அந்தப் பத்து ரூபாய் துரையின் நண்பரான ஒருவரின் கையில் கிடைத்திருக்கிறது.

உமாசங்கர்

அதைப்பார்த்த துரையின் நண்பர், உடனடியாக பத்து ரூபாயை துரையிடம் காண்பித்தார். அது எங்கு கிடைத்தது என்று துரை தன்னுடைய நண்பரிடம் விசாரித்தபோது கள்ளச்சந்தையில் மது வாங்கும் போது கிடைத்த தகவலைத் தெரிவித்தார். இதையடுத்து பத்து ரூபாய் நோட்டுடன் காவல் நிலையத்துக்குச் சென்ற துரை, விவரத்தை போலீஸாரிடம் கூறினார்.உடனடியாக போலீஸார் அன்றைய தினம் யார், யார் மது வாங்கினார்கள் என்ற விவரத்தைச் சேகரித்தனர். அப்போது நந்தினியின் கணவர் உமாசங்கரும் மது வாங்கியது தெரியவந்தது. அதனால் துரை வீட்டில் நகை, பணத்தைத் திருடியது உமாசங்கர் என்று சந்தேகமடைந்த போலீஸார் மீண்டும் இருவரிடம் விசாரித்தனர்.

அப்போது நாங்கள் துரையின் வீட்டின் கதவைத் திறக்கவே இல்லை என இருவரும் கூறினர். அப்போது பத்து ரூபாய் நோட்டைக் காண்பித்த போலீஸார், உமாசங்கர் மது வாங்கிய விவரத்தையும் கூறினர். அதன்பிறகு நந்தினியும் உமாசங்கரும் பணம், நகை, வெள்ளி கொலுசைத் திருடியதை ஒப்புக் கொண்டனர். பின்னர் இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து சங்கர் நகர் போலீஸார் கூறுகையில், “நந்தினியின் கணவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் உமாசங்கர் சிரமப்பட்டு வந்திருக்கிறார். அதனால் ஆட்டோவில் காய்கறிகளை விற்று வந்திருக்கிறார்.

மீட்கப்பட்ட நகைகள்

இந்தச் சமயத்தில்தான் துரை தன்னுடைய அம்மா இறந்ததால் வீட்டைப் பூட்டி விட்டு நந்தினியிடம் சாவி கொடுத்து விட்டு சென்றிருக்கிறார். துரை வீட்டு உபயோகப் பொருள்களை தவணை முறையில் விற்கும் தொழில் செய்து வருவதால் அவரிடம் எப்போதும் பணம் இருக்கும். அதனால் சாவி கையில் கிடைத்தவுடன் நந்தினியும் உமாசங்கரும் சேர்ந்து கதவைத் திறந்து பீரோவிலிருந்து நகை, பணம், வெள்ளி கொலுசை திருடியிருக்கின்றனர். பின்னர் நகை, வெள்ளி கொலுசை வீட்டில் வைத்தால் சிக்கல் எனக்கருதிய அவர்கள் உறவினர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைத்திருக்கின்றனர். திருடிய பணத்தில் 50,000 ரூபாய் வரை ஒரு மாதத்தில் செலவழித்திருக்கின்றனர். துரையின் எதிர் வீட்டில் குடியிருக்கும் பிரேமா என்பவர் வந்தவுடன் அவரிடம் துரையின் வீட்டு சாவியை நந்தினி திரும்ப கொடுத்து விட்டார். துரை எழுதி வைத்திருந்த பத்து ரூபாயால் நந்தினியும் உமாசங்கரும் சிக்கிக் கொண்டனர்” என்றனர்.

பத்து ரூபாய் நோட்டில் துரை கையெழுத்து போட்ட விவரத்தைக் காவல் நிலையத்தில் கூறியதும் போலீஸார் முதலில் நம்பவில்லை. பிறகு ஒரு வெள்ளைத் தாளில் அவரைக் கையெழுத்து போடச் சொல்லி இரண்டு கையெழுத்தும் ஒரே மாதிரியாக இருக்கிறதா என போலீஸார் சரிபார்த்திருக்கின்றனர். அதன்பிறகுதான் துரையை போலீஸார் நம்பியிருக்கின்றனர். ரூபாய் நோட்டில் எழுதக்கூடாது என்று கூறப்பட்டாலும் அதில் எழுதி, கையெழுத்து போட்டதால் இந்தத் திருட்டு வழக்கில் துப்பு துலங்கியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.