தேர்தலின் போது பணம், பொருள் தருவதாக கூறி டோக்கன் கொடுத்து ஏமாற்றிவிட்டார்!: பா.ம.க எம்.எல்.ஏ. அருள் மீது தொகுதிமக்கள் குற்றச்சாட்டு..!!

சேலம்: சேலம் மேற்கு தொகுதியில் தேர்தலுக்கு முதல் நாள் வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகித்துவிட்டு உறுதியளித்தபடி பண விநியோகம் செய்யவில்லை என்று பா.ம.க எம்.எல்.ஏ. அருள் மீது அத்தொகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சட்டப்பேரவை தேர்தலில் சேலம் மேற்கு தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட அருள் வெற்றிபெற்று எம்.எல்.ஏ. வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் மீது சேலம் மேற்கு தொகுதி மக்கள் டோக்கன் விநியோகித்து ஏமாற்றியதாக குற்றம்சாட்டியுள்ளனர். 
தேர்தலுக்கு முதல் நாள் இரவு, அருள் தரப்பில் தங்களுக்கு மாம்பழம் சின்னம் பொறித்த டோக்கன் விநியோகப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். வெற்றி பெற்றவுடன் டோக்கன் பெற்றவர்களுக்கு 2000 ஆயிரம் ரூபாய் ரொக்கமோ அல்லது பரிசு பொருளோ வழங்கப்படும் என்று உறுதி அளித்ததாகவும் ஆனால் இதுவரை எதுவும் கொடுக்கவில்லை என்றும் வாக்காளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பணம் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டதாக கருக்கல்வாடி கிராமத்தில் கோட்டமேடு பகுதி கயிறு திரிக்கும் தொழிலாளர்கள் குடும்பத்தினர் ஒன்றுதிரண்டு எம்.எல்.ஏ. அருளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 
பணம் தருவதாக கூறி வெற்றிபெற்ற அருள், வெற்றிபெற்ற பின்னர் தங்களை சந்தித்து நன்றி தெரிவிக்கக்கூட வரவில்லை என்று கூறியுள்ள கருக்கல்வாடி மக்கள், தங்களை ஏமாற்றிய எம்.எல்.ஏ.வை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். இதேபோல சேலம் மேற்கு தொகுதிக்குட்பட்டு கே.ஆர். தோப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் எம்.எல்.ஏ.அருளுக்கு எதிராக டோக்கன் விநியோகம் செய்துவிட்டு பணம் தரவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், தனக்கு எதிரான புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ள எம்.எல்.ஏ. அருள், வாக்காளர்களுக்கு தான் டோக்கன் ஏதும் விநியோகிக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அருள் சார்பில் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.