மதுபானம் கடத்திய பாஜக நிர்வாகியை மடக்கிப் பிடித்த போலீஸார்..!

ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் கடந்த மாதம் பத்தாம் தேதியில் இருந்து அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் மதுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் குவிந்தவண்ணம் உள்ளனர்.

மேலும் காரைக்காலில் இருந்து  மதுபாட்டில்களை வாங்கிவந்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.காவல் துறையினரும் தொடர்ந்து வாகன தணிக்கை செய்து மதுபாட்டில் கடத்தி வருபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்கு உட்பட்ட வடகண்டம் பகுதியில் காவல் ஆய்வாளர் ரேகாராணி, உதவி ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்துள்ளனர்.

அவர்களிடம் ஒரு அட்டைப் பெட்டி இருந்துள்ளது. உடனடியாக காவல்துறையினர் அவர்களை மடக்க முயன்றபோது இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு இருவரும் தப்பி ஓடினர். அந்த இரு சக்கர வாகனத்தை காவல்துறையினர் சோதனை செய்தபோது, அதில் காரைக்காலிலுள்ள 40 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, தப்பி ஓடியவர்கள் மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் குடவாசல் அருகே உள்ள காவனூர் பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் மற்றும் இலையூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது. இதில், மதுசூதனன் பாஜகவின் விவசாய அணி மாவட்ட செயலாளராக உள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் காரைக்கால் சென்று அங்கு மது பாட்டில்களை வாங்கி வந்து குடவாசல் பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

 

இதனையடுத்து காவல்துறையினர் மதுபாட்டில்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து, வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.