பெரம்பலூர்: காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், பெரம்பலூர் லாட்ஜில் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா புதூர்உத்தமனூர் மேற்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுரேஷ்(31). திருச்சி மாவட்டம் லால்குடி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணிபுரிந்து வந்த இவர், கல்லக்குடியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கும் 34 வயது பெண்ணை காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆசிரியை வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால், சுரேஷின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, வேற ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க அதற்கான ஏற்பாடுகள் நடந்தது.இந்த தகவல் தெரிய வந்த ஆசிரியை, காதலன் சுரேஷுடன் சேர்த்து வைக்கக் கோரி கடந்த 31ம்தேதி திருச்சி மத்திய மண்டல ஐஜி அலுவலகத்தில் மனு கொடுத்தார். இந்த தகவல் போலீஸ்காரர் சுரேஷ்க்கு தெரியவர, கடந்த 1ம்தேதி முதல் விடுப்பில் சென்றார். அன்று மாலை பெரம்பலூர் சென்ற சுரேஷ், வெங்கடேசபுரத்தில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கினார். நேற்றுமுன்தினம் மாலை நெஞ்சுவலி, மூச்சு திணறல் ஏற்பட்டதால் லால்குடியில் உள்ள தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார்.அவர்கள் பெரம்பலூர் போலீசுக்கு தகவல் தந்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் தனியார் லாட்ஜிக்கு சென்று பார்த்த போது சுரேஷ் விஷம் குடித்து மயங்கி கிடந்தது தெரிய வந்தது. திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுரேஷ் நேற்று உயிரிழந்தார்.
