நித்திரவிளை: கொல்லங்கோடு நகராட்சியில் இருந்து பிரிக்ககோரி வள்ளவிளை கிராம மக்கள் நடத்திய போராட்டம் 9 மணி நேரத்துக்கு பின் முடிவுக்கு வந்தது. குமரி மாவட்டம் கொல்லங்கோடு பேரூராட்சி, நகராட்சியாக மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீரோடி, மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை ஆகிய மீனவ கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தங்கள் கிராமங்களை தனியாக பிரித்து 1986 க்கு முன், அதாவது கொல்லங்கோடு பேரூராட்சி உருவாக்கப்படுவதற்கு முன் இருந்தது போல், மார்த்தாண்டன்துறை ஊராட்சியாக உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்களையும் தொடங்கி உள்ளனர். உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் கூறி உள்ளனர். இந்த போராட்டத்தின் ஒரு கட்டமாக நேற்று (4ம்தேதி) வள்ளவிளை கிராம மக்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு) ஆகியவற்றை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தினர். காலை 11 மணிக்கு, கொல்லங்கோடு பி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள், தங்களிடம் இருந்து வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை திரும்ப பெற்றுக் கொண்டு அதற்கான ஒப்புதல் சான்று தருமாறு கூறினர். போலீஸ் வாகனத்தையும் சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மாலை 3 மணியளவில் கிள்ளியூர் தாசில்தார் திருவாழி, டி.எஸ்.பி. தங்கராமன், கிராம நிர்வாக அதிகாரி பிரசாத் ஆகியோர் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் தரப்பில் உங்களுக்கு ரேஷன் பொருட்கள் மற்றும் வாக்களிக்கும் உரிமை வேண்டாம் என்றால் நீங்கள் உங்கள் அட்டையை ஒப்படைத்து விட்டு செல்லலாம் என்றனர். ஆனால் பொதுமக்கள் தரப்பில் தங்களிடம் இருந்து இவற்றை வாங்கியதற்கான சான்று எழுத்து பூர்வமாக வேண்டும் என்றனர். அப்போது அதிகாரிகள் தரப்பில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. தேர்தல் ஆணையம் தான் இந்த பிரச்சினையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அப்ேபாது பொதுமக்கள் தரப்பில் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் சம்பவ இடத்துக்கு வர வேண்டும். கலெக்டர் உறுதிமொழி தந்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்றனர். இதனால் பரபரப்பு நீடித்தது. பின்னர் இரவு 7 மணியளவில் உதவி கலெக்டர் அலர்மேல் மங்கை வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் தரப்பில் அளிக்கப்படும் கோரிக்கை மனுவை, தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு அனுப்பி வைத்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது பொதுமக்கள் ஏற்கனவே மனு அளித்து உள்ளோம் என்றனர். பின்னர் தொடர்ந்து பேச்சு வார்த்ைத நடத்தியதன் பேரில் பொதுமக்கள் மனு அளித்து விட்டு இரவு 8 மணியளவில் கலைந்து சென்றனர். காலை 11 மணிக்கு தொடங்கிய போராட்டம் 9 மணி நேரத்துக்கு பின் முடிவு வந்தது. இந்த போராட்டம் காரணமாக அதிரடிப்படை போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக இளம்பாலை முக்கு முதல் வள்ளவிளை வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
