கோபி அருகே சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பெண்

கோபி: கோபி நம்பியூர் சுண்ணாம்புகாரியூரில் சிறுத்தையை கண்டு பெண் ஒருவர் ஓடி சென்று உயிர் தப்பினார். சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நம்பியூர் காந்தி நகரில் கடந்த 3 நாட்களுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த ஒருவரது 3 ஆடுகளை சிறுத்தை கடித்து கொன்றது. இதைத்தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க டி.என்.பாளையம் வனத்துறையினர் 13 இடங்களில் கேமரா பொருத்தி கண்காணித்து வந்தனர். ஆனால், அடுத்த நாள் சிறுத்தை, நம்பியூர் பஸ் நிலையம் அருகே உள்ள செட்டியாம்பதியில் வெங்கிடுசாமி என்பவரது தோட்டத்தில் இருந்த 2 ஆடுகளை கடித்து கொன்றது. திருப்பூர் மாவட்ட வன எல்லையில் சிறுத்தை இருந்ததால், டி.என்.பாளையம் வனத்துறையினருடன், திருப்பூர் மாவட்ட வனத்துறையினரும், விளாமுண்டி வனத்துறையினரும் இணைந்து சிறுத்தையை தேடினர். இந்நிலையில், அங்கிருந்து சென்ற சிறுத்தை வசந்தம் நகர் பகுதியில் நடமாடுவது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பது தெரிய வந்தது. நேற்று மாலை இருகாலூர் சுண்ணாம்புகாரியூரில் விவசாய நிலத்தில் தென்பட்டுள்ளது. சுண்ணாம்புகாரியூரை சேர்ந்த மணியம்மாள் (45) என்பவர், அதே பகுதியில் உள்ள குளத்தின் அருகே விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, ஏதே சத்தம் கேட்கவே மணியாம்மாள் திரும்பி பார்த்த போது, சுமார் 100 அடி தூரத்தில் சிறுத்தை ஒன்று இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அச்சமடைந்த மணியம்மாள் விவசாய நிலத்தில் இருந்து ஓடி ஊருக்குள் சென்று உயிர் தப்பினார். இதுகுறித்து மணியம்மாள் கிராம மக்களிடம் தெரிவித்தார். இதையடுத்து வனத்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், அங்கு சென்ற டி.என்.பாளையம் வனத்துறையினர் மற்றும் போலீசார் சிறுத்தையை தேடினர். அப்பகுதியில் பெரிய அளவிலான வறண்டகுளம் இருப்பதும். அடர்த்தியான மரங்கள் அப்பகுதியில் பதுங்கியுள்ளது தெரிய வந்தது. இதனால், சிறுத்தையை தேடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.