திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையங்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை திருப்பூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 15 பேரூராட்சிகள் உள்ளன. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை, திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 440 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்ற நிலையில், அந்த தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தற்பொழுது நடந்து கொண்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 440 வார்டுகளுக்கான தேர்தலை பொறுத்தவரை, நேற்றைய நிலவரப்படி மொத்தம் 2,580 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை என்பது இன்று துவங்கி, நடைபெற்று வருகிறது. இதைத்தவிர, வாக்குப்பதிவுகளை நடத்துவதற்கான ஏற்பாட்டினையும் தற்பொழுது மாநகராட்சியினர் செய்து வருகின்றனர். அதன்படி, வாக்குப்பதிவு நடப்பதற்கான மையங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் தற்பொழுது தயராகி கொண்டிருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் மொத்தம் 60 வார்டுகள் உள்ளது; இந்த 60 வார்டுகளில் 776 இடங்களில் வாக்குப்பதிவுகள் நடப்பதற்கான ஏற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் மாவட்டம் முழுவதும் சேர்த்து மொத்தம் 1,319 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடியிலேயே வாக்குகள் பதிவு செய்யப்பட்டு, பின்பு பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான மையங்கள் அமைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாநகராட்சியில் இருக்கக்கூடிய 60 வார்டுகளில் பதிவாக கூடிய வாக்குகள் ஒரே ஒரு மையத்தில் தான் எண்ணப்பட உள்ளது. சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணுவதற்கான மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல மாவட்டம் முழுவதும், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியோடு சேர்த்து மொத்தம் 12 வாக்கு எண்ணுவதற்கான மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
