சேலம்: சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்த பக்கநாடு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (26). இவர் தனது நண்பரான மணிகண்டன் (28), சவுந்தரராஜன் (22) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு குண்டத்துமேட்டில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, முருகேசனின் நண்பர் சக்திவேல் (26) என்பவரும் அங்கு வந்து அவர்களுடன் சேர்ந்து மது அருந்தினார். இந்நிலையில் சக்திவேல் மற்றும் முருகேசனுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.பின்னர், சக்திவேல் மதுபோதையில் வீட்டிற்கு சென்று ஆடு அறுக்கும் கத்தியுடன் வந்து, முருகேசனை நெஞ்சிலும், தடுக்க முயன்ற மணிகண்டனை வயிற்றிலும் குத்தியுள்ளார். மேலும் சவுந்தரராஜனின் தலையில் கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த முருகேசன், மணிகண்டன் இடைப்பாடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று சேர்ந்தனர். ஆனால், சவுந்தரராஜன் தலையில் கத்திக்குத்துப்பட்ட நிலையில் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அப்பகுதி வழியாகச் சென்றவர்கள் பார்த்து ஜலகண்டபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சவுந்தரராஜனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தலையில் குத்தப்பட்ட கத்தியுடன் மருத்துவமனைக்கு வந்தார். அவரது தலையில் இருந்த கத்தியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றினர். தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
