மகனைத் தேடி 21வது முறையாக புதுச்சேரிக்கு வந்த தாய்: கலங்கவைக்கும் பாசப்போராட்டம்

காணாமல் போன தனது மகனை தேடி தொடர்ந்து 21 ஆவது  முறையாக புதுச்சேரிக்கு வந்து தன்னாலான முயற்சிகளை செய்து வரும் தாயின் பாசப்போராட்டம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

குருசாமி மற்றும் பேச்சியம்மாள் தம்பதியினர் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள். இவர்கள் அங்கு சலவைத்தொழில் செய்து வருகின்றனர். இந்த தம்பதியினரின் மகன் ரவி. இவருக்கு வயது 39. 

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு புதுச்சேரி வந்தபோது விபத்து ஒன்றில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பேச்சியம்மாவிற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து 2019 ஆண்டு முதல் புதுச்சேரிக்கு பேச்சியம்மாள் மகனைத் தேடி வந்துகொண்டிருக்கிறார். 

கடந்த 2 ஆண்டுகளாக 21 முறை வந்து மகனை தேடிச் சென்றிருக்கிறார் பேச்சியம்மாள். தன் மகனைத் தேடி புதுச்சேரி (Puducherry) உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை. இருந்தாலும் அரசு மருத்துவமனை, புதுச்சேரி நகரப் பகுதி என அனைத்து இடங்களிலும் மகனைத் தேடி அலைந்த பேச்சியம்மாள்,  இதற்காக மட்டும் தனது கழுத்தில், காதில் இருந்த நகைகளை விற்று சுமார் 60 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்துள்ளார்.

ALSO READ | விஜய்யின் அரசியல் சந்திப்பு : திட்டம் என்ன! 

தன்னிடம் வைத்துள்ள பையில் மகனை கண்டுபிடிக்க உதவும் வகையில், மனுக்கள், புகைப்படங்கள், தொலைபேசி எண்கள் என அனைத்தையும் வைத்துள்ள அவர், சாலைகளில் யாரை பார்த்தாலும் அவர்களிடத்தில் தனது மகனின் புகைப்படத்தை காண்பித்து அவரைப் பற்றி விசாரித்து, கண்டுபிடித்து தரும்படி கதறும் காட்சி சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

அடுத்த முயற்சியாக புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமியிடம் (N Rangaswamy) மனு அளிப்பதற்காக இன்று சட்டசபை வாசலில் அமர்ந்து இருந்த அவர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை வைத்தார். உடனடியாக இவரது மகனை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தூத்துக்குடியில் இருந்து புதுச்சேரி அரசை நம்பி வந்துள்ள இந்த மூதாட்டியின் நம்பைக்கையை நிறைவேற்றி, புதுச்சேரி அரசும், காவல்துறையும் தாமதிக்காமல் அவரது மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது.

ALSO READ | கற்பழிப்பு முயற்சியில் பயங்கரம் – 5 மாத கர்ப்பிணி படுகொலை 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.