உக்ரைன் பதற்றத்துக்கு மத்தியில் புதின்-ஜின்பிங் நேரில் சந்திப்பு

பீஜிங் :

ரஷியா மற்றும் உக்ரைன் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில் தற்போது உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷியா 1 லட்சம் படை வீரர்களையும், தளவாடங்களையும் குவித்துள்ளது. இதனால் இருநாடுகளின் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.

உக்ரைன் மீது ரஷியா படையெடுக்க தயாராகி வருவதாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நம்புகின்றன. ஆனால் உக்ரைன் மீது படையெடுக்கும் எந்த திட்டமும் இல்லை என்று ரஷியா மறுத்து வருகிறது.

ஆனாலும் அதை நம்பாத அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளதார தடைகளை விதிப்பது உள்ளிட்ட பல வழிகளில் ரஷியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. அதோடு உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் எச்சரித்து வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுடான பதற்றத்துக்கு மத்தியில் ரஷியா அதிபர் புதின் நேற்று சீனாவுக்கு சென்று அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங்கை நேரில் சந்தித்து பேசினார்.

சீன அதிபர் ஜின்பிங் கடந்த 2 ஆண்டுகளில் வெளிநாட்டு தலைவர் ஒருவருடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தியது இதுவே முதல் முறையாகும். சீனாவில் கொரோனா பரவ தொடங்கியதற்கு பிறகு ஜின்பிங் நாட்டை விட்டு வெளியே செல்லவில்லை. அதேபோல் எந்த வெளிநாட்டு தலைவரும் சீனா வரவில்லை.

ஆனால் தற்போது சீனா தலைநகர் பீஜிங்கில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டு தலைவர்கள் பலரும் நேற்று சீனா சென்றனர். அவர்களில் புதினும் ஒருவர்.

ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவுக்கு முன்பாக இருநாட்டு தலைவர்களும் பீஜிங்கில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது, உக்ரைன் பிரச்சினை, கொரோனோ தொற்று உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர்.

இந்த சந்திப்புக்கு பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த புதின், ரஷியாவும் சீனாவும் ‘கண்ணியமான உறவுக்கு எடுத்துக்காட்டு’ என கூறி இரு தரப்பு உறவை பாராட்டினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “சீனாவுடனான ரஷியாவின் உறவுகள் நட்பு மற்றும் மூலோபாய கூட்டாண்மையின் பாதையில் படிப்படியாக வளர்ந்து வருகின்றன, அவை உண்மையிலேயே முன்னோடியில்லாத இயல்புடையவை” என கூறினார்.

சீன அதிபர் ஜின்பிங் பற்றி பேசிய அவர் “ஜின்பிங்கை நான் நீண்ட காலமாக அறிவேன். நாங்கள் இருவரும் உலகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பல பொதுவான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் நல்ல நண்பர்கள் மற்றும் அரசியல்வாதிகள். நாங்கள் எப்போதும் நெருக்கமான தொடர்பை பேணி வருகிறோம்” என்றார்.

உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் நெருங்கிய நட்பு நாடான சீனாவின் அதிபர் ஜின்பிங்கை புதின் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.