இன்று ஆன்டிகுவாவில் (Antigua) உள்ள நார்த் சவுண்டில் (North Sound) உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் (Sir Vivian Richards Stadium) 2022 உலகக்கோப்பை பைனல் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ளது. ஐசிசி யு19 உலகக் கோப்பை (Worldcup) பட்டத்தை 5வது முறை வெல்ல இந்தியா தயாராக உள்ளது. இதுவரை நடைபெற்ற 14 தொடரில், இந்தியா 8 முறை இறுதிப் போட்டிகளில் விளையாடி 4 முறை கோப்பையை வென்றுள்ளது. மறுபுறம், இங்கிலாந்து அணி 1998க்கு பிறகு இதுவரை கோப்பை வெல்லவில்லை.
ALSO READ | U19 WC அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த இந்திய அணி
இந்திய U19 வீரர்களுடன், முன்னாள் இந்திய கேப்டனும், 2008 ஆம் ஆண்டு U19 உலகக் கோப்பையை வென்றவருமான விராட் கோலி (Virat Kohli)கடந்த வியாழன் அன்று உரையாடி, மதிப்புமிக்க குறிப்புகளை அளித்தார். 2000ஆம் ஆண்டு முகமது கைஃப் தலைமையில் இந்தியா கோப்பையை வென்றது. 2008ல் கோஹ்லி தலைமையில் 2வது பட்டத்தை வென்றனர், 2012ல் உன்முக்த் சந்த் தலைமையில் அணி வெற்றி பெற்றது. கடைசியாக 2018ல் பிரித்வி ஷா தலைமையில் பட்டத்தை வென்றது. 2020ல் இந்தியா இறுதிப்போட்டிக்கு வந்து வங்கதேசத்திடம் தோற்றது.
கேப்டன் யாஷ் துல் மற்றும் துணை கேப்டன் ஷேக் ரஷீத் ஆகியோர் கொரோனா தொற்று காரணமாக 3 லீக் ஆட்டங்களில் 2ஐ தவறவிட்டனர். இருப்பினும் இந்திய அணி பைனல் போட்டி வரை சென்றுள்ளது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய வலுவான அணியாக உள்ளது. ஆரம்ப விக்கெட்டுகளை இழந்த பிறகும், யாஷ் மற்றும் ரஷீத் 3வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெற வைத்தனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் வெற்றிக்கு பிறகு, கடந்த 24 ஆண்டுகாலமாக கோப்பையை வெல்லாமல் இருப்பதை முடிவுக்கு கொண்டு வர இங்கிலாந்து ஆர்வமாக உள்ளது. இந்தியாவைப் போலவே இங்கிலாந்தும் இந்தப் தொடர் முழுவதும் தோற்கடிக்கப்படவில்லை.