சின்னச்சுருளி அருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

வருசநாடு: சின்னச்சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே, கோம்பைத்தொழுவில் மேகமலை அருவி என்னும் சின்னச்சுருளி அருவி உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்  அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்தது. அருவி அருகே சோதனைச்சாவடி அமைத்து, சுற்றுலாப் பயணிகளை திருப்பி அனுப்பி வந்தனர். இந்நிலையில், தேனி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும் அனுமதி அரசு வழங்கப்பட்ட நிலையில் சின்னச்சுருளி அருவியில் மட்டும் 2 ஆண்டுகளாக தடை நீடித்து வந்தது. எனவே, அருவியில் குளிக்க வனத்துறை அனுமதிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில மழை இல்லாததால், அருவியில் குறைந்தளவு தண்ணீரே வருகிறது. ஆனால் இன்று விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரவாய்ப்பு உள்ளது. இதனால், மேகமலை வனச்சரகர் சதீஷ்கண்ணன் மற்றும் வனத்துறையினர் மேகமலை அருவியில் நேற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை தீவிர தணிக்கை செய்து, மதுபாட்டில், பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் என வனத்துறை பணியாளர்களுக்கு வனச்சரகர் உத்தரவிட்டார். இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.