சென்னையில் இருந்து திருப்பூர் சென்ற அரசு விரைவு பஸ் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது: வாழப்பாடி அருகே அதிகாலையில் விபத்து, 20பேர் படுகாயம்

வாழப்பாடி: வாழப்பாடி அருகே நேற்று அதிகாலை அரசு பஸ் சாலையோரத்தில் உள்ள 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பெண்கள் உள்பட 20 பயணிகள் படுகாயமடைந்தனர். சென்னையில் இருந்து திருப்பூருக்கு நேற்று முன்தினம் இரவு அரசு விரைவு பஸ் ஒன்று 45 பயணிகளுடன் புறப்பட்டது.  பஸ்சை கள்ளக்குறிச்சியை சேர்ந்த டிரைவர் செல்வராஜ் ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக பெரம்பலூரை சேர்ந்த சீனிவாசன் வந்தார். சேலம் மாவட்டம், வாழப்பாடி புதுப்பாளையம் அருகே சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், தாலுகா அலுவலகம் அருகே நேற்று அதிகாலை 4.30 மணியளவில் பஸ் வந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் உள்ள 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கி பெண்கள் உள்பட 20 பயணிகள் படுகாயமடைந்தனர். டிரைவர்கள் இருவரும் சிறுகாயங்களுடன் தப்பினர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்பு பணியில்  ஈடுபட்டனர்.விபத்து குறித்து வாழப்பாடி போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, வாழப்பாடி டிஎஸ்பி முத்துசாமி, இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் போலீசாரும், தீயணைப்பு  வீரர்களும் விரைந்து வந்து, இடிபாடுகளில் சிக்கிய 20 பயணிகளை மீட்டனர். பின்னர், அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் பலத்த காயமடைந்த 10 பேர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர், மேட்டுப்பட்டி சுங்கச் சாவடியில் இருந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, பள்ளத்தில் விழுந்த பஸ் மீட்கப்பட்டது. இந்த விபத்தால் அவ்வழியாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து, வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பஸ் டிரைவர் செல்வராஜ், சென்னையில் இருந்து ஆத்தூர் தலைவாசல் வரை பஸ்சை ஓட்டி வந்துள்ளார். பின்னர், தலைவாசலில் இருந்து மாற்று டிரைவர் சீனிவாசன் பஸ்சை ஓட்டி வந்த போது விபத்து நடந்துள்ளது தெரியவந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.