ட்விஸ்ட்! மயக்கமே வந்துடுச்சு! திமுகவிற்கு அதிர்ச்சி தந்த சுயேட்ச்சைகள் -எலக்சனுக்கு முன்பே இப்படியா
கோவில்பட்டி: கோவில்பட்டி கடம்பூர் பேரூராட்சியில் 3 தொகுதிகளை திமுக தேர்தலுக்கு முன்பே இழந்துள்ளது. அந்த பேரூராட்சியில் இதனால் பேரூராட்சி தலைவர் பதவியை திமுக இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.
இதற்கான பிரச்சாரத்தை மாவட்ட அளவில் கட்சிகளின் நிர்வாகிகள் தொடங்கி நடத்தி வருகிறார்கள். சில இடங்களில் மட்டும் திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து கூட்டணி கட்சிகள் தனியாக நிற்கின்றன.
உ.பி.தேர்தல்: அதிருப்தி ஜாட் சமூகத்தை சமாதானப்படுத்துவதில் அமித்ஷா மும்முரம்- இன்று தீவிர பிரசாரம்!

கடம்பூர்
இந்த நிலையில் கோவில்பட்டி அருகே கடம்பூர் பேரூராட்சியில் உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நடக்கும் முன்பே திமுக பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. அங்கு 3 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வேட்புமனுவில் கையெழுத்து குறைபாடு இருப்பதாக சுயேட்சைகள் கொடுத்த புகாரை அடுத்து அவர்களின் வேட்புமனுக்கள் மொத்தமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது அங்கு திமுகவிற்கு பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது.

கடம்பூர்
அதன்படி கடம்பூரில் 1வது வார்டில் திமுக ஜெயராஜ், 2வது வார்டில் திமுக சண்முகலெட்சுமி, 11வது வார்டில் திமுக சின்னத்துரை ஆகியோர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆனால் இவர்கள் தங்களை முன்மொழிப்பவர்களின் கையெழுத்துக்களை போலியாக போட்டதாக கூறப்படுகிறது. அதாவது வேட்புமனுக்களை முன்மொழியும் நபர்கள் உள்ளூரை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் மூவருக்கும் வெளியூரில் வசிக்கும் சிலர் போலி கையெழுத்து போட்டதாக கூறப்படுகிறது.

பொய்யான கையெழுத்து
அதாவது அந்த ஊரை பூர்வீகமாக கொண்டு, வெளியூரில் பல வருடமாக வசித்து வரும் மூன்று பேரின் கையெழுத்தை இவர்கள் மூவரும் போலியாக போட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இவர்கள் மூவரின் வேட்பு மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அப்பகுதியை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர்கள் அந்த மூன்று பேரின் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டத்தில் குதித்தனர்.

விசாரணை
இதையடுத்து தேர்தல் அலுவலர் சுரேஷ் குமார் அந்த 3 திமுக வேட்பாளர்களின் மனுக்கள் நிறுத்தி வைத்தார். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் 3 பேரும் வேட்பு மனுவில் முன்மொழிந்ததாக கூறப்படுவர்கள் அந்த மனுவில் கையெழுத்தே போடவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் பெயரை சொல்லி போலியான கையெழுத்து போடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஊரில் இல்லாத நபர்களின் கையெழுத்துக்களை பொய்யாக வேட்புமனுவில் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

தள்ளுபடி
இதற்காக விளக்கம் கேட்டும் 3 வேட்பாளர்களும் ஆஜராகவில்லை என்பதால் அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த திடீர் ட்விஸ்டால் அவர்களை எதிர்த்து போட்டியிட்ட நாகராஜா, ராஜேஸ்வரி, சிவகுமார் ஆகிய 3 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இத்தனை களேபரங்களால் கடம்பூர் தேர்தல் அலுவலர் சுரேஷ்குமார் அதீத டென்ஷனில் இருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு எதிராக சுயேட்சைகள் 2 நாட்களாக போராடி வந்தனர்.

போராட்டம்
அவரின் அலுவலக வாசலிலேயே சுயேட்சைகள் 2 நாட்களாக போராடி வந்தனர். இந்த நிலையில்தான் நேற்று மனுக்களை தள்ளுபடி செய்த சில நிமிடங்களில் தேர்தல் அலுவலர் சுரேஷ்குமார் மயங்கி விழுந்தார். அலுவலக வாசலிலேயே சுரேஷ்குமார் மயக்கம் அடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம், மனு தள்ளுபடி, சர்ச்சை உள்ளிட்ட பல காரணங்களால் இவருக்கு பிரஷர் அதிகரித்து அதனால் இவர் மயக்கம் அடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது.