திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இந்த தேர்தலோடு அதிமுக காணாமல் போக வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

திருப்போரூர்: மாமல்லபுரம் மற்றும் திருப்போரூர் பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் திமுக கூட்டணி வெல்ல உழைக்க வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார். திருப்போரூர் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் திருப்போரூரில் நேற்றுந நடந்தது. மாவட்டத் துணைச் செயலாளர் அன்புச்செழியன் தலைமை தாங்கினார். நகர திமுக செயலாளர் தேவராஜ் வரவேற்றார். எம்பி செல்வம், திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் இதயவர்மன், தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பையனூர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சரும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளருமான தா.மோ.அன்பரசன், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசியதாவது.திருப்போரூர் பேரூராட்சி தேர்தலில் திமுக 12 இடங்களிலும், மதிமுக 2 இடங்களிலும், விசிக 1 இடத்திலும் போட்டியிடுகிறது. இந்த 15 இடங்களிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களே வெற்றி பெறும் அளவுக்கு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். இந்த தேர்தலோடு அதிமுக காணாமல் போக வேண்டும். நமக்குள் கருத்து வேறுபாடுகள், கோபங்கள் இருந்தால் அதை ஒத்திவைத்து விட்டு, வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும். வருத்தப்பட்டு ஒதுங்கி நிற்கும் கட்சிக்காரரிடம் நிர்வாகிகள், பேசி சரி செய்ய வேண்டும்.இந்த தேர்தலில் ஒவ்வொரு வார்டிலும் உண்மையான தொண்டர்களை நிறுத்தி இருக்கிறோம். நமது ஆட்சியை வைத்து எந்த அளவுக்கு மக்களுக்கு நல்லது செய்ய முடியுமோ, அந்த அளவுக்கு திட்டங்களை அடித்தட்டு மக்களுக்கு சென்று சேரும் வகையில் செயல்பட வேண்டும்.  வரும் 19ம் தேதி வரை தேர்தல் வேலை தவிர மற்ற வேலைகளை பார்க்க கூடாது என்றார். இதில் மதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், காங்கிரஸ் மாவட்ட தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சியின் 15 வார்டுகளுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மாமல்லபுரத்தில் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் வெ.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி சண்முகானந்தன், இளைஞரணி அமைப்பாளர் எம்.வி.மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதிமுக மாநில துணை பொது செயலாளர் மல்லை சி.இ.சத்யா வரவேற்றார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, வேட்பாளர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்தார். பின்னர் அவர் பேசியதாவது.மாமல்லபுரம் பேரூராட்சி மாவட்டத்தின் இதயமாக திகழ்கிறது. மாமல்லபுரத்தில், உள்ள ஒரு அதிமுக பிரமுகர், 2 முன்னாள் அமைச்சர்களுக்கு பினாமியாக உள்ளார். அவர்களிடம், நிறைய பணம் உள்ளது. அதனால், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். மாவட்டத்தில், உள்ள சின்ன பேரூராட்சிகளில் மாமல்லபுரம் பேரூராட்சியும் ஒன்று. அதிமுகவை சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்குவார்கள். ஒவ்வொரு, வார்டிலும் 10 பெண்களை குழுவாக ஒன்றிணைத்து, வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிக்கவும், இளைஞரணியில், உள்ள இளைஞர்கள் ஒவ்வொரு தெருவாக சென்று அங்குள்ள படித்த இளைஞர்களிடம் ஓட்டு கேட்க வேண்டும். நாம், தேர்தலில் நின்றால் வெற்றி பெற்று வர வேண்டும். எனவே, மாமல்லபுரம் பேரூராட்சியின் 15 வார்டுகளிலும் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் வெற்றி பெற உறுதி ஏற்போம். அதிமுகவை சேர்ந்தவர்கள் ஒரு வார்டிலும் வெற்றி பெறக் கூடாது என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.