'துரைமுருகன் கூறுவது வடிகட்டின பொய்!' – ஓ.பி.எஸ்., காட்டம்!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் இருந்த போது நீட் தடுத்து நிறுத்தப்பட்டது என்ற அமைச்சர் துரைமுருகனின் வாதமே வடிகட்டின பொய் என்பதை சுட்டிக்காட்ட விரும்பவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

திமுக ஆட்சியில் இருந்தவரை நீட் தமிழகத்தில் இல்லை என்று கூறியிருக்கிறார் அமைச்சர்
துரைமுருகன்
அவர்கள். 2010 ஆம் ஆண்டு டிசம்பரில் நீட்டுக்கு கையெழுத்து போட்ட திமுக, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில், ஐந்தே மாதத்தில் ஆட்சியையே இழந்து விட்டது. பிறகு எப்படி திமுகவின் ஆட்சிக் காலத்தில் நீட் வரும். எனவே, மு. கருணாநிதி முதல்வராக இருந்த போது நீட் தடுத்து நிறுத்தப்பட்டது என்ற துரைமுருகனின் வாதமே வடிகட்டின பொய் என்பதை இந்தத் தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கும்.. – வெளியானது சூப்பர் அறிவிப்பு!

2010 ஆம் ஆண்டு நீட் தேர்விற்கு ஆதரவு தெரிவித்த திமுக, தமிழகத்தில் ஆட்சி பறிபோன பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பின், 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ஆம் நாள் நீட் குறித்த கருத்தைத் தெரிவித்தது. அப்போதைய திமுக தலைவர் வெளியிட்ட அறிக்கையில், “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்றும், மருத்துவப் படிப்பிற்கு மத்திய அரசு
நீட் தேர்வு
நடத்தப்படுவதாக தகவல்கள் வருகின்றன என்றும், இதனை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென்றும்” கூறப்பட்டு இருக்கிறது. மத்திய அரசில் இருந்து கொண்டு தகவல் வருவதாக அறிக்கை வெளியிடுவதிலிருந்தே திமுக எந்த அளவிற்கு ‘நீட் தேர்வு ரத்து’ என்ற பிரச்சனையில் அக்கறையில்லாமல் இருந்து இருக்கிறது என்பது தெளிவாகிறது.

அதாவது, 2010 ஆம் ஆண்டு நீட் தேர்விற்கு ஆதரவாக கையெழுத்திட்டுவிட்டு, 2012 ஆம் ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முரசொலியில் எழுதுகிறார். என்ன அக்கறை! என்ன உறுதிப்பாடு! இதிலிருந்து ‘பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்’ என்ற அடிப்படையில் திமுக செயல்பட்டு இருப்பது தெளிவாகிறது. ஆனால் நீட் தேர்வு ரத்து என்பதற்கு தொடர்ந்து அதிமுக குரல் கொடுக்கும், கொடுத்துக் கொண்டேயிருக்கும். மத்திய அரசுக்கு கைகட்டி நின்று அதிமுக ஆட்சி நடத்தியதாக துரைமுருகன் கூறி இருக்கிறார். யாருக்கும் கைகட்டி நிற்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – விரைவில் அறிவிப்பு?

அதே சமயத்தில் தமிழகத்தின் நலனுக்காக, தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசிடம் ஒத்துழைப்பு கொடுக்கத் தயங்கமாட்டோம். ‘காரியம் பெரிதா, வீரியம் பெரிதா’ என்று கேட்டால் எங்களைப் பொறுத்தவரை காரியம்தான் பெரிது.

அதனால் தான் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என பல நல்ல திட்டங்கள் தமிழகத்துக்கு கிடைத்தன என்பதை துரைமுருகன் புரிந்து கொள்ள வேண்டும்.’கருமமே கண்ணாயினார்’ என்பதன் அடிப்படையில், நீட் தேர்வை ரத்து செய்ய முனைப்புடன் நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.