நீட் விவகாரம்: திமுக அரசுக்கு என்னென்ன சட்ட வாய்ப்புகள் உள்ளன?

தமிழக அரசு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வந்த ஆளுநர்
ஆர்.என்.ரவி
, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை தமிழக அரசுக்கே மீண்டும் அனுப்பி வைத்துள்ளார்.

“தமிழ்நாடு அரசு அமைத்த நீட் உயர் மட்ட குழு அறிக்கையையும், அதை அடிப்படையாக வைத்து இயற்பட்ட தமிழ்நாடு அரசின் மசோதாவையும் ஆய்வு செய்தோம். நீட் தேர்வுக்கு முந்தைய காலகட்டம், நீட் தேர்வுக்கு பிந்தைய காலகட்டத்தில் மாணவர் சேர்க்கையை ஒப்பிட்டு பார்த்தோம். அப்படி பார்க்கையில் இந்த மசோதா சமூக நீதிக்கு எதிரான மசோதாவாக அறியப்படுகிறது.” என்று ஆளுநர் மாளிகை அளித்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில், நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக வருகிற 8ஆம் தேதி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை தற்போது திரும்ப அனுப்பியது தமிழக அரசுக்கு சாதகமாகவே உள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்திய அரசியல் சாசனத்தின் 200ஆவது பிரிவில் இருக்கும் விதிமுறையின்படி ஒரு காரணத்துடன் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்தால், அதனை மறுபரிலீசனை செய்து திருத்தங்களுடன் மசோதாவை தமிழக அரசு ஆளுநருக்கு திருப்பி அனுப்பலாம். அதன்பிறகும் ஒப்புதல் கிடைக்கவில்லை என்றால், ஆளுநரின் நிலைப்பாட்டை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்லலாம் என்கின்றனர்.

குட்டையில் விழுந்த மொட்டை தலையன்: துரைமுருகன் சாடல்!

இந்த விவகாரத்தில் இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 201யை ஆளுநர் பயன்படுத்தவில்லை. அவர் அதனை பயன்படுத்தி இருந்தால், தமிழக அரசு கொண்டு வந்துள்ள நீட் மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரிக்கும் வாய்ப்புகள் இருந்திருக்கும் என்றும் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், ஆளுநர் அரசியல் சாசனத்தின் 200ஆவது பிரிவை பயன்படுத்தி உள்ளார். அதன்படி, திரும்பி வந்த மசோதாவை திருத்தங்களுடன் தமிழக அரசு மீண்டும் அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல்அளிப்பதை தவிர வேறு வழியில்லை. இதற்கும் ஒப்புதல் தராமல் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பினால் அது, அரசியல் சாசனத்தின் 200ஆவது பிரிவுக்கு முரணாக இருக்கும். எனவே, இது தமிழக அரசுகு சாதகமாகவே உள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

“தற்போதைய சூழலின்படி, தமிழக அரசு உச்ச நீதிமன்றமும் செல்லத் தேவையில்லை. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழகத்தில் நீட் மசோதா இருப்பதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி ஒரு சட்டம் இயற்றினால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும். எனவே, அதனை கவனத்தில் கொண்டு அதற்கான பதிலுடன் மசோதாவை அனுப்ப வேண்டும்.” எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.