லதா மங்கேஷ்கருக்கு இறுதிச்சடங்கு – பிரதமர் மோடி பங்கேற்பு

இந்தியாவின் பழம்பெரும் முன்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சுமார் 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி உள்ளிட்ட பலரும் லதா மங்கேஷ்கரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்திய திரையுலக பிரபலங்களும் லதா மங்கேஷ்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என மகாராஷ்டிரா அறிவித்துள்ளது. மத்திய அரசு சார்பில் 2 நாள் நாடு முழுவதும் துக்க நாள் அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழின் முன்னணி இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரும் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து மகாராஷ்டிரா வந்தடைந்தார். அவரை மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, முன்னாள் முதலமைச்சர் தேவேந்திரபட்னாவிஸ், மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்யா தாக்ரே, கோவா முதலமைச்சர் பிரமோத் சவான் ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர். இதனையடுத்து, மகாராஷ்டிரா அரசு சார்பில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்துக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு லதா மங்கேஷ்கரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.