லதா மங்கேஷ்கர் மரணம்: நேருவையே கண்ணீர் சிந்த வைத்த இசைக் குயில்

லதா மங்கேஷ்கர் மரணம்: நேருவையே கண்ணீர் சிந்த வைத்த இசைக் குயில்

By BBC News தமிழ்

|

லதா மங்கேஷ்கர்

BBC

லதா மங்கேஷ்கர்

இந்திய சினிமாவின் தேன் குரலுக்குச் சொந்தக்காரரான லதா மங்கேஷ்கர் இப்போது நம்மிடையே இல்லை. பிபிசி நிருபர் ரெஹான் ஃபசல் அவரது வாழ்க்கையின் பொன்னான தருணங்களை நினைவு கூர்ந்துள்ளார்.

ஜவஹர்லால் நேரு பொது இடங்களில் அழுவதும் இல்லை, வேறு யாரும் இப்படி அழுவதை விரும்புவதும் இல்லை என்பது அவர் குறித்துக் கூறப்படும் பிரபலமான கூற்றாகும். ஆனால் ஜனவரி 27, 1963 அன்று கவிஞர் பிரதீப் எழுதிய ‘ஏ மேரே வதன் கே லோகோன்’ பாடலை லதா மங்கேஷ்கர் பாடியபோது அவராலேயே கண்ணீரை அடக்க முடியவில்லை.

பாடல் முடிந்ததும், லதா மேடைக்குப் பின்னால் காபி குடித்துக் கொண்டிருந்தார், அப்போது இயக்குநர் மெஹபூப் கான் லதாவிடம் வந்து பண்டிட்ஜி உங்களை அழைக்கிறார் என்று கூறினார்.

மெஹபூப், லதாவை நேருவின் முன் அழைத்துச் சென்று, “இவர் தான் நம் லதா. இவரது பாடல் எப்படி இருந்தது? என்றார்.

“மிக நன்றாக இருந்தது. இந்தப் பெண் என் கண்களில் கண்ணீர் வரவழைத்து விட்டாள்,” என்று லதாவை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு உணர்ச்சி பெருக்கில் கூறினார்.

உடனடியாக இந்தப் பாடலின் மாஸ்டர் டேப் விவித் பாரதியின் ஸ்டேஷனுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மிக விரைவில் HMV நிறுவனம் அதைப் பதிவு செய்து சந்தைக்குக் கொண்டு வந்தது.

இந்தப் பாடல், கொஞ்சம் கொஞ்சமாக தேசிய அளவில் பெரும் உணர்ச்சி அலையை உருவாக்கிவிட்டது.

1964ல் நேரு மும்பை வந்தபோது, பிரேபோர்ன் ஸ்டேடியத்தில் அவருக்கு முன்னால் ஆர்ஸூ படத்தின் ‘அஜி ரூட் கர் கஹான் ஜாயேங்கே’ பாடலை லதா பாடினார்.

பின்னர் நேரு அவருக்கு ஒரு துண்டுசீட்டை அனுப்பினார். அதைப் பெற்றுக்கொண்டபின் மீண்டும் ஒரு முறை ‘ஏ மேரே வதன் கே லோகன்’ பாடச் சொல்லிக் கேட்க, லதா அதைப் பாடினார்.

‘பர்சாத்’ படம் ஒரு திருப்புமுனை

1949ஆம் ஆண்டு அந்தாஸ் படம் வெளியானதிலிருந்து, இசைத் துறையில் முதல் ஐந்து இடங்களை எப்போதும் லதா மங்கேஷ்கரே பிடித்துள்ளார். இருப்பினும், ராஜ் கபூர் – நர்கிஸ் நடித்த பர்சாத் படம் வந்ததிலிருந்து தனது நிலை உயர்ந்தது என்பதை அவரே ஒப்புக்கொண்டார்.

மதன் மோகன் லதாவைப் பற்றிக் கூறும்போது, “1956 ஆம் ஆண்டு மெட்ரோ-மர்ஃபி சார்பில் இசைத் திறமைகளை அடையாளம் காண நாடு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தியதில், லதாவுக்கு அருகில் வருமளவுக்குக் கூட எங்களால் ஒருவரை அடையாளம் காண முடியவில்லை. அவர், நமது காலத்தில் பிறந்து வாழ்ந்தார் என்பது என்பது நமது அதிர்ஷ்டம்.” என்று குறிப்பிட்டார்.

‘இந்தப் பெண் சுரம் தவறுவதே இல்லை’

உண்மையில், 1949இல் ‘மஹல்’ படம் வெளியானபோது, கீதா ராய் தவிர, லதா மங்கேஷ்கரின் போட்டியாளர்களான ஷம்ஷாத் பேகம், ஜோராபாய் அம்பாலாவாலி, பாருல் கோஷ் மற்றும் அமீர்பாய் கர்னாடகி ஆகியோர் ஒவ்வொருவராக வெளியேறினர்.

1950-ல் அவர் ‘ஆயேகா ஆனே வாலா’ பாடல் பாடியபோது, அகில இந்திய வானொலியில் திரைப்பட இசையை இசைப்பது தடைசெய்யப்பட்டிருந்தது. அப்போது ரேடியோ சிலோன் இல்லை. கோவா ரேடியோவில் லதாவின் குரலை இந்தியர்கள் முதலில் கேட்டனர்.

அப்போது கோவா போர்ச்சுகலின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்தியப் படைகள் 1961இல் தான் அதை விடுவித்தது.

புகழ்பெற்ற கிளாசிக்கல் பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை விவரிக்கிறார், ஒருமுறை நான் படே குலாம் அலிகானைச் சந்திக்க அமிர்தசரஸ் சென்றபோது, லதாவின் பாடல் ‘யே ஜிந்தகி உசி கி ஹை ஜோ கிசி கா ஹோ கயா’ டிரான்சிஸ்டரில் கேட்டதாக நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். கான் சாஹிப் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று மௌனமானார், பாடல் முடிந்ததும், ‘இந்தப் பெண் சுரம் தவறுவதே இல்லை’ என்றார். இந்தக் கருத்தில் ஒரு தந்தையின் அன்பும், கலைஞரின் ஆத்திரமும் இருந்தது.” என்று குறிப்பிட்டார்.

ஐந்து வயதில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட திறமை

லதாவின் இசைப்பயணம் ஐந்து வயதில் தொடங்கியது. நஸ்ரின் முன்னி கபீரின் ‘லதா இன் ஹெர் ஓன் வாய்ஸ்’ என்ற புத்தகத்தில், “நான் என் தந்தை தீனாநாத் மங்கேஷ்கர் பாடுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் அவருக்கு முன்னால் பாடத் துணிந்ததில்லை.

அவர் ஒரு முறை தனது மாணவர் ஒருவருக்கு பூரியா தனாஸ்ரீ ராகத்தைக் கற்பித்துக்கொண்டிருந்தார். ஏதோ வேலையாக வெளியே சென்றார் என் தந்தை. நான் வெளியே விளையாடிக் கொண்டிருந்தேன். அந்த மாணவர் பாடுவதைக் கேட்டேன். அவர் சரியாகப் பாடவில்லை என்று எனக்குத் தோன்றியது. அவரிடம் நான் எப்படிப்பாட வேண்டும் என்று பாடிக்காட்டினேன்.

அப்போது தான் திரும்பி வந்த என் தந்தை, கதவுக்குப் பின்னால் இருந்து நான் பாடுவதைக் கேட்டார், அவர் என் அம்மாவைக் கூப்பிட்டு, “நமது வீட்டிலேயே ஒரு சிறந்த பாடகி இருக்கிறாள் என்று நமக்கே தெரியவில்லை” என்றார். மறுநாள் காலை ஆறு மணிக்கு என்னை எழுப்பி தம்பூராவை எடுக்கச் சொன்னார்.இன்று முதல் நீ பாடக் கற்றுக்கொள் என்றார். பூரியா தனாஸ்ரீ ராகத்தில் தொடங்கினார். அப்போது எனக்கு ஐந்து வயதுதான் இருக்கும்,” என்று லதாவே குறிப்பிடுகிறார்.

மூச்சுக் கட்டுப்பாட்டு வித்தை

லதா மங்கேஷ்கர் பல இசைக்கலைஞர்களுடன் பணிபுரிந்திருந்தாலும், குலாம் ஹைதரிடம் இவருக்குத் தனி மதிப்பு இருந்தது. ‘பீட்’-டுடன் வரும் பாடல் வரிகளுக்கு இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் இதனால் பாடல் மேலும் சிறப்பு பெறுகிறது என்றும் பாடம் சொல்லிக் கொடுத்திருந்தார்.

லதா அனில் பிஸ்வாஸிடம் இருந்து மூச்சுக் கட்டுப்பாட்டின் வித்தைகளைக் கற்றுக்கொண்டார்.

ஹரிஷ் பீமானி தனது ‘லதா திதி அஜிப் தாஸ்தான் ஹை’ புத்தகத்தில், “பாடலைப் பாடும்போது கேட்பவருக்குத் தெரியாமல் எந்த இடத்தில் மூச்சை விட வேண்டும் என்று அனில் வற்புறுத்துவார். இரண்டு வார்த்தைகளுக்கு இடையே உள்ளிழுத்து, மைக்ரோஃபோனில் இருந்து உங்கள் முகத்தை மெதுவாக எடுத்து, உள்ளிழுத்து, உடனடியாக அசல் நிலைக்குத் திரும்பி, பாடலைத் தொடர வேண்டும் என்று சொல்லிக்கொடுத்திருக்கிறார். மைக்கில் இருந்து விலகும் இந்த நொடி நேரச் செயல்பாட்டினால், கடைசி வார்த்தையின் கடைசி எழுத்து மற்றும் புதிய வார்த்தையின் முதல் எழுத்து இரண்டும் சற்று உச்ச ஸ்தாயியில் வர வேண்டும் என்றும் கூறுவார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மொழி ஆளுமையில் திருத்தம் – திலிப் குமாரின் பங்கு

லதாவின் இனிமையான குரல் மட்டுமன்றி, அவரது சிறந்த உருது மொழி ஆளுமையும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதற்கான பெருமை திலீப்குமாருக்கே உரித்தாக வேண்டும்.

ஹரிஷ் பீமானி தனது ‘லதா திதி அஜிப் தாஸ்தான் ஹை’ புத்தகத்தில், ‘ஒரு நாள் அனில் பிஸ்வாஸும் லதாவும் மும்பை புறநகர் ரயிலில் கோரேகானுக்குச் சென்று கொண்டிருந்தனர். தற்செயலாக, திலீப் குமார் பாந்த்ரா ஸ்டேஷனில் அதே ரயிலில் ஏறினார்.

“அனில் பிஸ்வாஸ் புதிய பாடகியை திலீப் குமாருக்கு அறிமுகப்படுத்தியபோது, ‘மராத்திக்காரர்களின் வாயிலிருந்து உருது வார்த்தைகள் எப்படித் தெளிவாக வரும்” என்றார்.

“லதா இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டார். பிறகு ஷஃபி அவருக்கு ஒரு மௌல்வி உஸ்தாத்தை ஏற்பாடு செய்தார், அவர் பெயர் மெஹபூப். லதா அவரிடம் உருது மொழியின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிறிது காலம் கழித்து லாகூர் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது, அங்கு ஜத்தன்பாய் மற்றும் அவரது மகள் நர்கிஸ் ஆகியோர் இருந்தனர். ஸ்டுடியோவில் ‘தீபக் பகைர் கைசே பர்வானே ஜல் ரஹே ஹை’ பாடலின் பதிவை லதா தொடங்கினார்.

ரெக்கார்டிங் முடிந்ததும், லதாவை அழைத்த ஜத்தன் பாய், அவருடைய பகைர் என்ற வார்த்தை உச்சரிப்பைக் கேட்டு மிகவும் சிலாகித்தார். இந்தத் திறமை அனைவருக்கும் வாய்ப்பதில்லை என்றும் கூறினார்.

மெஹபூப் கானுக்குத் தொலைபேசியில் ‘ரசிக் பல்மா’ பாடல்

லதாவின் குரலின் இன்னொரு தனிச்சிறப்பு இளமையாகிக்கொண்டே போகும் அவரது குரல் இனிமை. 1961ஆம் ஆண்டு ஜங்கிலி திரைப்படத்தில் சைரா பானுவுக்காக ‘காஷ்மீர் கி கலி ஹூன்’ பாடியபோது குரலில் இருந்த அதே இனிமையும் துள்ளலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அனாமிகா படத்தில் ஜெயா பாதுரிக்காக ‘பாஹோம் மெ சலே ஆவோ’ பாடியபோதும் இருந்தது.

லதா மங்கேஷ்கர்: நேருவையே கண்ணீர் சிந்த வைத்த இசைக் குயில்

Getty Images

லதா மங்கேஷ்கர்: நேருவையே கண்ணீர் சிந்த வைத்த இசைக் குயில்

1958ஆம் ஆண்டு மெஹபூப் கான் அமெரிக்காவில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றதாகவும் விழா முடிந்த இரண்டு நாட்களில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படும் ஒரு நிகழ்வு உண்டு.

லதா மங்கேஷ்கரின் வாழ்க்கை வரலாற்றில் ராஜு பாரதன், “லதா அவரை பம்பாயிலிருந்து அழைத்து நலம் விசாரித்தார். அப்போது மெஹபூப் சாஹிப், உங்கள் பாடலைக் கேட்க எனக்கு மிகவும் ஆவலாக இருக்கிறது. இந்த நாட்டில் நான் அந்த ரெக்கார்டை எங்கே தேடுவேன் என்று கூற, எந்தப் பாடல் கேட்க வேண்டும் என்று வினவிய லதா, அவருக்குப் பிடித்தமான ரசிக் பல்மா பாடலைத் தொலைபேசியிலேயே பாடிக்காட்டினார். ஒரு வாரத்திற்குப் பிறகு மீண்டும் அதே பாடலைப் பாடினார். மெஹபூபின் உடல் நிலை குணமானதில் இந்தப் பாடலின் பங்கு என்ன என்பது தெரியாது. ஆனால் இதற்குப் பிறகு லதாவின் மனதுக்குப் பிடித்த பாடலாக இது ஆனது” என்று குறிப்பிட்டுள்ளார்.

வாகா எல்லையில் நூர்ஜஹான் – லதா சந்திப்பு

முதலில் இந்தியாவில் வாழ்ந்து பின்னர் பாகிஸ்தான் சென்ற நூர்ஜஹானுடன் லதா மங்கேஷ்கருக்கு நெருங்கிய நட்பு இருந்தது.

1952-ல் ஒருமுறை லதா அமிர்தசரஸ் சென்றிருந்தபோது, இரண்டே மணி நேரப் பயண தூரத்தில் இருந்த லாகூரில் இருந்த நூர்ஜஹானைச் சந்திக்க விரும்பினார். உடனே இருவரும் பலமணிநேரம் போனில் பேசிக்கொண்டனர்.பின்னர் இருவரும் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஒருவரை ஒருவர் சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது.

பிரபல இசையமைப்பாளர் சி.ராமச்சந்திரன் தனது சுயசரிதையில், “இந்தச் சந்திப்பை எனது தொடர்புகளை வைத்து ‘ஏற்பாடு செய்தேன். ராணுவ ரீதியாக, யாருக்கும் சொந்தமில்லாத நோ மேன்ஸ் லேண்ட் என்ற இடத்தில் தான் வாகா எல்லைக்கு அருகில் இந்தச் சந்திப்பு நடந்தது” என்று எழுதியுள்ளார்.

“நூர்ஜஹான் லதாவைப் பார்த்தவுடனே ஓடி வந்து, பிரிந்த தோழியைப் போல அவரை இறுகப் பற்றிக் கொண்டார். இருவரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர். இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த எங்களால் கூட கண்ணீரை அடக்க முடியவில்லை. இருபுறமும் ராணுவ வீரர்கள் கூட கண் கலங்கினர்.”

“லதாவுக்கு லாகூரிலிருந்து பிரியாணி, இனிப்புகள் கொண்டு வந்திருந்தார் நூர்ஜஹான். நூர்ஜஹானின் கணவரும் உடனிருந்தார். லதாவுடன் அவரது இரண்டு சகோதரிகள் மீனா, உஷா மற்றும் அவரது தோழி மங்களா ஆகியோர் இருந்தனர். இசைக்கு எதுவும் தடையில்லை என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது.”

மொஹம்மத் ரஃபியுடன் மனத்தாங்கல்

லதா பல பாடகர்களுடன் பாடினாலும் முகமது ரஃபியுடன் பாடிய அவரது பாடல்கள் மிகவும் பிரபலம்.

ரஃபியைப் பற்றி பேசுகையில், லதா ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நினைவு கூர்ந்திருந்தார். “ஒருமுறை ரஃபி சாஹப்பும் நானும் மேடையில் பாடிக்கொண்டிருந்தோம். பாடலின் வரியைச் சற்று மாற்றி ரஃபி அவர்கள் மிகவும் நகைச்சுவையாகக் கூறினார். அதைக் கேட்டு உடனிருந்த அனைவரும் அடக்க முடியாமல் சிரித்தனர். தொடர்ந்து அந்தப்பாடலை முடிக்க முடியாமல் திரையிட வேண்டியிருந்தது” என்று அவர் கூறினார்.

அறுபதுகளில், ரஃபி சாஹாப்புடன் அவரது பாடல்களின் ராயல்டி குறித்து கருத்து வேறுபாடு எழுந்தது. அந்தச் சண்டையில் முகேஷ், தலத் மஹ்மூத், கிஷோர் குமார், மன்னா டே ஆகியோர் லதாவின் தரப்பில் இருந்தனர். ஆஷா போஸ்லே முகமது ரஃபிக்கு ஆதரவாக இருந்தார்.

நான்கு ஆண்டுகளாக, இருவரும் ஒருவரையொருவர் தவிர்த்துவந்த நிலையில், சச்சின் தேவ் பர்மன் இருவருக்கும் சமரசம் செய்து வைத்தார்.

சச்சின் தேவ் பர்மன் லதாவுக்குக் கொடுத்த பீடா

சச்சின் தேவ் பர்மனுக்கும் லதாவை மிகவும் பிடித்திருந்தது. அவரது பாடலில் மகிழ்ச்சியடைந்த போது முதுகில் தட்டிக்கொடுத்து பீடா கொடுப்பது அவரது வழக்கம். சச்சின் தேவ் பீடா பிரியர். அவர் யாருக்கும் எளிதில் பீடா கொடுப்பதில்லை. தனது மனதைக் கவர்ந்தவர்களுக்கு மட்டுமே அவர் பீடா கொடுத்து வந்தார். ஆனால் ஒருமுறை சச்சின் தேவ் பர்மனுக்கும் லதா மங்கேஷ்கருக்கும் இடையேயும் மோதல் ஏற்பட்டது.

‘மிஸ் இந்தியா’ படத்தில் லதா ஒரு பாடலைப் பாடினார். அதை லதா ‘சாஃப்ட் மூட்’டில் பாட வேண்டும் என்று விரும்புவதாக பர்மன் கூறினார். தான் பாடித் தருவதாகவும் ஆனால் அச்சமயம் மிகவும் பிஸியாக இருப்பதாகவும் கூறினார் லதா. சில நாட்களுக்குப் பிறகு, பர்மன் ஒருவரை லதாவிடம் பதிவு தேதியை நிர்ணயிக்க அனுப்பினார்.

லதா பிஸியாக இருக்கிறார் என்று சச்சின் தேவ் பர்மனிடம் சொல்ல வேண்டிய அந்த நபர், இந்தப் பாடலைப் பாட லதா மறுத்துவிட்டார் என்று கூறிவிட்டார். சச்சின் தேவ் பர்வம் கோபமடைந்தார், இனி ஒருபோதும் லதாவுடன் இணைந்து பணி செய்வதில்லை என்று கூறினார்.

லதாவும் அவரைக் கூப்பிட்டு, “இதை நீங்கள் அறிவிக்கத் தேவையில்லை. நானே உங்களோடு இணைந்து பணியாற்ற மாட்டேன்” என்று கூறினார்.

பல வருடங்களுக்குப் பிறகு இருவருக்கும் இடையே இருந்த தவறான புரிதல் களையப்பட்டு, பிறகு லதா பந்தினி படத்தில் அவருக்காக ‘மோரா கோர அங் லை லே’ பாடலைப் பாடினார்.

கிரிக்கெட்டில் விருப்பம்

லதா மங்கேஷ்கருக்குக் கிரிக்கெட் மிகவும் விருப்பம். 1946ஆம் ஆண்டு மும்பையில் உள்ள பிரேபோர்ன் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டியை முதன்முதலில் பார்த்தார்.

ஒருமுறை இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டியையும் பார்த்தார்.

கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் டான் பிராட்மேன் அவருக்கு கையெழுத்திட்ட உருவப்படத்தை வழங்கினார்.

லதா மங்கேஷ்கரிடம் நல்ல கார் சேகரிப்பு இருந்தது. அவர் தனது முதல் காராக வெள்ளி நிற ஹில்மேன் வாங்கினார், அதற்காக அவர் அந்தக் காலத்தில் செய்த செலவு 8000 ரூபாய்.

அந்தக் காலத்தில் ஒவ்வொரு பாடலுக்கும் 200 முதல் 500 ரூபாய் வரை வாங்குவார். 1964ல் ‘சங்கம்’ படத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் 2000 ரூபாய் பெற ஆரம்பித்தார். பிறகு ஹில்மேனை விற்று நீல நிற ‘ஷெவர்லே’ காரை வாங்கினார்.

யஷ் சோப்ராவின் ‘வீர் ஜாரா’ படத்துக்கு லதா பாடல்கள் பாடியபோது, சோப்ரா தனக்கு அண்ணன் மாதிரி என்று சொல்லி, சம்பளத்தை ஏற்கவில்லையாம். இந்தப் படம் வெளியானதும் யஷ் சோப்ரா அவருக்கு மெர்சிடிஸ் காரைப் பரிசாக அனுப்பினார். லதா தன் வாழ்வின் கடைசி நாட்கள் வரை அதே காரில் தான் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரங்களும் துப்பறியும் கதைகளும் விருப்பம்

லதா மங்கேஷ்கருக்கு வைரம் மற்றும் மரகதம் என்றால் மிகவும் பிடிக்கும். சம்பாதித்த பணத்தில் 1948-ல் 700 ரூபாய்க்கு வைர மோதிரத்தை வாங்கினார். தனது இடது கையின் மூன்றாவது விரலில் அணிந்திருந்தார்.

அவர் தங்கத்தின் மீது ஒருபோதும் விருப்பம் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவர் தங்கக் கொலுசுகளை அணிந்திருப்பார். இது பிரபல பாடலாசிரியர் நரேந்திர ஷர்மா அவருக்கு வழங்கிய அறிவுரை.

லதா துப்பறியும் நாவல்களைப் படிப்பதிலும் மிகவும் விருப்பமுள்ளவர். ஷெர்லாக் ஹோம்ஸின் அனைத்து புத்தகங்களின் தொகுப்பையும் வைத்திருந்தார்.

லதா மங்கேஷ்கருக்கு இனிப்பு வகைகளில் ஜிலேபி மிகவும் விருப்பம். ஒரு காலத்தில், இந்தூரின் குலாப் ஜாமூனும் தயிர் வடையும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன.

அவளுக்கு கோவா மீன் குழம்பு மற்றும் கடல் இறால் மிகவும் பிடிக்கும். ரவா கேசரி மிகவும் அருமையாகச் செய்வார்.

அவர் கையால் சமைத்த ஆட்டிறைச்சியை யார் சாப்பிட்டாலும் மறக்கவே முடியாது. அவருக்கு இறைச்சி சமோசாவும் மிகவும் பிடிக்கும். லதா மங்கேஷ்கருக்கு பானி பூரி மிகவும் பிடிக்கும் என்று பலரால் நம்பமுடியாது. அவர் எலுமிச்சை ஊறுகாய் மற்றும் ஜோவர் ரொட்டியையும் மிகவும் விரும்பி உண்டார்.

2001-ல் பாரத ரத்னா

இன்று இந்தியாவில், லதா மங்கேஷ்கரைத் தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள். அவரது குரலை கடவுளின் மிகப்பெரிய வரமாக பலர் கருதுகின்றனர்.

லதா 1989 இல் தாதாசாகேப் பால்கே விருதையும், 2001 இல் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னாவையும் பெற்றுள்ளார்.

லதா மங்கேஷ்கருக்கு மிகப்பெரிய அஞ்சலியை பிரபல பாடலாசிரியர் மஜ்ரூஹ் சுல்தான்புரி வழங்கினார். ‘லதா மங்கேஷ்கர்’ என்ற தலைப்பில் அவர் கவிதை ஒன்றைச் சமர்ப்பித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil

English summary
Lata Mangeshkar who passed away was popularly known as the Nightingale of India.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.