வாழப்பாடி அருகே இன்று அதிகாலை விபத்து; 10 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் படுகாயம்

வாழப்பாடி: வாழப்பாடி அருகே இன்று அதிகாலை அரசு பேருந்து சாலையோரத்தில் உள்ள 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. இதில், 20 பயணிகள் படுகாயமடைந்தனர். சென்னையில் இருந்து திருப்பூருக்கு நேற்றிரவு அரசு பேருந்து புறப்பட்டது. இதில் 45 பயணிகள் பயணம் செய்தனர். கள்ளக் குறிச்சியை சேர்ந்த செல்வராஜ் பேருந்தை ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக பெரம்பலூரை சேர்ந்த சீனிவாசன் இருந்தார். இந்த பேருந்து, சேலம் மாவட்டம் வாழப்பாடி புதுப்பாளையம் அருகே சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது. இங்குள்ள தாசில்தார் அலுவலகம் அருகே பேருந்து வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பயணிகள் படுகாயமடைந்தனர். டிரைவர்கள் இருவரும் சிறு காயங்களுடன் தப்பினர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து வாழப்பாடி போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, வாழப்பாடி டிஎஸ்பி முத்துசாமி, இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் போலீசாரும், தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) முருகேசன் தலைமையிலான வீரர்களும் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிய 20 பயணிகளையும் மீட்டனர். பின்னர் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் 10 பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, மேட்டுப்பட்டி சுங்கச் சாவடியில் இருந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு பேருந்தை பள்ளத்தில் இருந்து மீட்டனர். இவ்விபத்தால் அவ்வழியாக ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து, வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பேருந்தின் ஓட்டுநர் செல்வராஜ் சென்னையில் இருந்து ஆத்தூர் தலைவாசல் வரை பேருந்தை ஓட்டி வந்துள்ளார். பின்னர், தலைவாசலில் இருந்து மாற்று டிரைவர் சீனிவாசன் பேருந்தை ஓட்டி வந்ததும், அப்போதுதான் விபத்து நடந்துள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விபத்து பற்றி தகவலறிந்த கலெக்டர் கார்மேகம், சேலம் அரசு மருத்துவ மனைக்கு வந்து அங்கு சிகிச்சை பெறும் பயணிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து, விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.