விண்ணப்ப படிவங்களில் ‘தந்தை பெயர்’ விருப்பத் தேர்வாக ஆக்க முன்னாள் தேவதாசிகளின் குழந்தைகள் கோரிக்கை
இன்று (06-02-2022) சில இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியாகியுள்ள செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
கர்நாடக மாநிலத்தில், முன்னாள் தேவதாசிகளின் குழந்தைகள் தங்களின் தந்தை பெயர் என்ன என்று தெரியாத காரணத்தால், விண்ணப்பப் படிவங்களில் தந்தையின் பெயர் இருக்கும் இடத்தை விருப்பத்திற்குரியதாக ஆக்குங்கள் என்று அம்மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் தேவதாசிகளின் குழந்தைகளுக்கு தங்களின் அடையாளம் குறித்த நெருக்கடி, இச்சமூகத்தில் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களை பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகள் என்று இச்சமூகம் முத்திரை குத்துகிறது.
“தாய் மற்றும் குழந்தைக்கான அடையாள அட்டையில் தொடங்கி பிறப்புச் சான்றிதழ், மருத்துவமனை மற்றும் அங்கன்வாடி பதிவு, கல்வி, உதவித்தொகை, விடுதிகள், வேலைகள் மற்றும் பிற அரசுத் திட்டங்கள் வரையிலான படிவங்களில் தந்தையின் பெயருக்கான இடம் உள்ளது. இந்த இழிவுபடுத்தலில் இருந்து எங்களைக் காப்பாற்றி, அதற்கான பத்தியை விருப்பத்தேர்வாக ஆக்குமாறு அரசைக் கேட்டுக்கொள்கிறோம், “என்கிறார் 17 வயதான இளங்கலை மாணவி லட்சுமி.
இத்தகைய கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொண்டு, கல்வி மற்றும் விழிப்புணர்வு மூலம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்று எண்ணும் இந்த குழந்தைகளின் மன உறுதி குறிப்பிடத்தக்கது என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
- கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை: சீருடை கட்டாயம் என அரசு ஆணை
- ராமானுஜர் சிலை: இந்தியாவின் ‘2வது உயரமான’ சிலையின் சிறப்பு என்ன?
பிரதமர் மோதியை வரவேற்காத தெலங்கானா முதல்வரை விமர்சித்த பா.ஜ.க ,காங்கிரஸ்
ஹைதராபாத்தில் ராமானுஜரின் 216 அடி உயர ‘சமத்துவ சிலை’ திறப்பு விழாவில் பங்கேற்ற, அங்கு வந்த பிரதமர் நரேந்திர மோதியை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் விமான நிலையத்தில் வரவேற்காமல் இருந்தது வெட்கக்கேடானது என்று பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளதாக ‘இந்து தமிழ் திசை’ செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தெலங்கானா மாநில பாஜக , தனது ட்விட்டர் பக்கத்தில், ”அரசியலமைப்பு சட்டத்தை கே.சி.ஆர் அடிக்கடி அவமதித்து வருகிறார். இப்போது அரசியல் சட்டத்தின் நெறிமுறைகளை மீறுவது கே.சி.ஆரின் முட்டாள்தனமான செயல். இது வெட்கக்கேடானது”, என விமர்சித்துள்ளது.
அதே போல், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, “தெலங்கானா முதல்வர் கே.சி.ஆர் தனது பதவிப் பிரமாணத்தை மீறியிருப்பது கவலையளிக்கிறது”, என்று ட்வீட் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தி வரவேற்காமல் தெலங்கானா முதல்வர் புறக்கணிப்பது, இது இரண்டாவது முறை.
கருத்தடைக்கு பின் பிறந்த குழந்தை: இழப்பீடு அளிக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கருத்தடை சிகிச்சைக்கு பின் பிறந்த பெண் குழந்தைக்கு பட்டப்படிப்பு முடிக்கும் வரை, ஆண்டுக்கு ரூ.1.20 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ‘தினத்தந்தி’ செய்தி தெரிவிக்கிறது.
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்த தனம் என்பவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை 2014-ஆம் ஆண்டு நடந்தது. இந்த நிலையில், அவர் மீண்டும் தனம் கர்ப்பம் தரித்தார். கடந்த 2017ஆம் ஆண்டு, அவரை பரிசோதித்த கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி டாக்டர்கள், கருத்தடை அறுவை சிகிச்சை தோல்வியடைந்துவிட்டதாக அறிக்கை அளித்தனர்.
இதனால், தனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க கோரி தமிழக அரசுக்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், கருத்தடை தோல்வி அடைந்ததால், கடந்த 2017 ஆம் ஆண்டு மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை மனுதாரர் தானாக முன்வந்து தேர்வு செய்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். அதனால், அவர் இழப்பீடு பெற தகுதியுள்ளவராக இந்த உயர்நீதிமன்றம் கருதுகிறது. அந்த குழந்தைக்கு 21 வயது வரையிலோ அல்லது பட்டப்படிப்பு முடிக்கும் வரையிலோ அந்த குழந்தையின் கல்வி கட்டணம், பாடப் புத்தகங்கள், எழுதுபொருட்கள் ஆகியவற்றுக்காக மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் கணக்கிட்டு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை அரசு வழங்க வேண்டும்,” என்று உத்தரவிட்டுள்ளது.
பிற செய்திகள்:
- அண்டர்-19 உலகக்கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி 5ஆவது முறை சாம்பியன் ஆன இந்தியா
- எவரெஸ்ட் சிகரம்: ‘அதிவேகத்தில் உருகும் பனிப்பாறைகள்; 100 கோடி பேருக்கு பாதிப்பு’
- அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் சொகுசு படகு பயணத்தால் நெதர்லாந்தில் கிளம்பும் சர்ச்சை
- கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை: சீருடை கட்டாயம் என அரசு ஆணை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: