நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

சென்னை:
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 வார்டுகளின் கவுன்சிலர் பதவிகளுக்கு, வரும் 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. 
வெற்றி பெறும் கவுன்சிலர்கள் இணைந்து, மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர்; நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணை தலைவர்களை தேர்வு செய்கின்றனர்.
இத்தேர்தலுக்கான மனுத்தாக்கல் ஜனவரி 28ந்தேதி துவங்கி 4ம் தேதி முடிவடைந்தது. மனுக்களை திரும்ப பெற இன்று மாலை 5:00 மணி வரை அவகாசம் உள்ளது. இதைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல், இன்று இரவு மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு,  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கு தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் மண்டலப் பார்வையாளர்களிடம் பொதுமக்கள்  தேர்தல் குறித்த புகார்களை  தெரிவிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும் சென்னை மாநகராட்சி ஆணையாளருமான ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக் குட்பட்ட 200 வார்டுகளுக்கு நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை பார்வையிட வடக்கு, மத்தியம் மற்றும் தெற்கு வட்டாரங்களுக்கு 3 பார்வையாளர்கள் மற்றும் மண்டலங்களுக்கு 15 மண்டலப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் மண்டலப் பார்வையாளர்களிடம் பொதுமக்கள் தேர்தல் குறித்த புகார்களை சென்னை மாநகர பொதுமக்கள்  தெரிவிக்கலாம் என ககன்தீப் சிங் பேடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.