கிரிப்டோகரன்சியை திருடி ஏவுகணை திட்டத்திற்கு நிதி சேகரித்த வட கொரியா
சைபர் தாக்குதல்கள் மூலம் வட கொரியா மில்லியன் கணக்கிலான கிரிப்டோகரன்சியை திருடி, தனது ஏவுகணை திட்டத்திற்கு அதை பயன்படுத்தியதாக ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சைபர்-தாக்குதல்கள் மூலம் 50 மில்லியன் டாலர்களுக்கும் (37 மில்லியன் பவுண்ட்) அதிகமான டிஜிட்டல் சொத்துக்களை திருடியதாக புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இத்தகைய தாக்குதல்கள் வட கொரியாவின் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்திற்கு “முக்கியமான வருவாய் ஆதாரம்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்புகள் வெள்ளிக்கிழமை ஐ.நா.வின் தடைகள் கண்காணிப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- வடகொரியாவின் தொடர் ஏவுகணைச் சோதனைகளுக்கு சீனா காரணமா?
- புத்தாண்டில் ஹைபர் சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ள வட கொரியா
இந்த சைபர் தாக்குதல்கள் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் குறைந்தது மூன்று கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களை குறிவைத்தன.
கடந்த மாதம் பாதுகாப்பு நிறுவனமான செயினாலிசிஸ் வெளியிட்ட ஆய்வில், வட கொரிய சைபர் தாக்குதல்கள் மூலம் கடந்த ஆண்டு 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள டிஜிட்டல் சொத்துக்களை ஈட்டியிருக்கலாம் என்று தெரிவித்தது.
மேலும் 2019 ஆம் ஆண்டில், அதிநவீன சைபர் தாக்குதல்களைப் பயன்படுத்தி வட கொரியா தனது பேரழிவுத் திட்டங்களுக்காக 2 பில்லியன் டாலர்களை திரட்டியதாக ஐ.நா. தெரிவித்தது.
வடகொரியா அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணைகளை ஏவுவதற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது.
எனினும், பொருளாதார தடைகளை மீறி, வட கொரியா தனது அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை உள்கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது என்று ஐநா அறிக்கை கூறுகிறது.
மேலும், சைபர் வழிகள் மற்றும் கூட்டு அறிவியல் ஆராய்ச்சி உட்பட வெளிநாடுகளில் பொருள், தொழில்நுட்பம் மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றைத் தொடர்ந்து தேடுகிறது.
வட கொரியாவின் ஏவுகணை சோதனையில் “குறிப்பிடப்பட்ட முடுக்கம்” இருப்பதாக, பொருளாதாரத் தடை கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.
கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (டிபிஆர்கே) என முறையாக அறியப்படும் வட கொரியா, கடந்த மாதம் மட்டும் ஒன்பது ஏவுகணை சோதனைகளை நடத்தியதாக அமெரிக்கா வெள்ளிக்கிழமை கூறியது.
“ஏவுகணைப் படைகளின் விரைவான ஆயத்தநிலை, அதன் பரந்த இயக்கம் (கடலில் உட்பட) மற்றும் மேம்பட்ட தாங்கு திறன் ஆகியவற்றிற்கான அதிகரித்த திறன்களை டி.பி.ஆர்.கே. நிரூபித்தது” என்று பொருளாதாரத் தடைகள் கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.
சீனாவும் ரஷ்யாவும் வட கொரியாவின் ஏவுகணைகளின் பரவலைக் கண்டிக்கும் அறிக்கையில் வெள்ளியன்று கையெழுத்திட மறுத்துவிட்டன.
வட கொரியாவுக்கான அதன் சிறப்புப் பிரதிநிதி இந்த வார இறுதியில் ஜப்பானிய மற்றும் தென் கொரிய அதிகாரிகளைச் சந்தித்து நிலைமையைப் பற்றி விவாதிப்பார் என்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா அறிவித்தது.
வடகொரியாவில் மனிதாபிமான நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும் ஐநா அறிக்கை கண்டறிந்துள்ளது. தொற்றுநோய்களின் போது அதன் எல்லைகளை மூடுவதற்கான நாட்டின் முடிவின் விளைவாக இது இருக்கக்கூடும் என்று அது கூறியது.
வட கொரியாவிடம் இருந்து தகவல் இல்லாததால், சர்வதேச தடைகளால் எவ்வளவு துன்பங்கள் ஏற்படுகின்றன என்பதைக் கண்டறிவது கடினம் என்று அது கூறியது.
பிற செய்திகள்:
- நரேந்திர மோதியின் தொகுதியில் மீண்டும் பாஜக வெற்றி பெறுமா? – கள நிலவரம்
- குடும்பக் கட்டுப்பாட்டுக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தை: செலவுகளை ஏற்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
- IND vs WI: 1000ஆவது போட்டியில் வெற்றி வாகை சூடிய இந்திய அணி: முக்கிய தகவல்கள்
- பாடகர் லதா மங்கேஷ்கர் மரணம்; இந்தியாவில் 2 நாள் தேசிய துக்கம்
- தெற்கு ரயில்வே புது வழித் தடங்களுக்கு ரூ.308 கோடி, வடக்கு ரயில்வேவுக்கு ரூ.31 ஆயிரம் கோடி: சு.வெ. புகார்
- மொராக்கோவில் 4 நாள்களாக ஆழ்துளை கிணற்றில் சிக்கித் தவித்த சிறுவன் உயிரிழப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்