சேலம்: தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக்கொள்வது இயல்பு. கூட்டணி வேறு, கொள்கை வேறு என சேலத்தில் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, எடப்பாடி பழனிசாமி பேசினார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று சேலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி ேதர்தல் பிரசாரத்தை துவக்கினார். சேலம் மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 60 பேரை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி, அம்மாப்பேட்டை கொங்கு வெள்ளாளர் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இரவு-பகல் பாராமல் தேனீ போல அனைவரும் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும். வாக்காளர்களை வீடு வீடாக சென்று சந்தித்து, வாக்கு கேட்க வேண்டும். தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுக தான். எம்ஜிஆர் பத்தரை ஆண்டுகளும், ஜெயலலிதா பதினைந்தரை ஆண்டுகளும் ஆட்சி செய்துள்ளனர். முதல்வராக நானும் 4 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். இந்த பெருமை எல்லாம் உங்களையே சேரும். நாங்கள் வேறு வழியில்லாமல் நீட் தேர்வை நடத்தினோம். பாஜவுடன் இணைந்து விட்டதாக கூறுகின்றனர். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக்கொள்வது இயல்பு. கூட்டணி வேறு, கொள்கை வேறு. எங்களுக்கு கொள்கை நிரந்தரம். கொள்கை தான் எங்கள் லட்சியம். நீட் தேர்வில் என்ன பிரச்னை இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.
