திண்டுக்கல்-சபரிமலை அகல ரயில்பாதைத் திட்டத்தை 3 பிரிவாக செயல்படுத்த வேண்டும்: ரயில்திட்ட போராட்டக்குழு வலியுறுத்தல்

தேனி:  திண்டுக்கல்-சபரிமலை அகலரயில் பாதை திட்டத்தை 3 பிரிவாக செயல்படுத்த வேண்டும் என ரயில் திட்ட போராட்டக் குழு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து திண்டுக்கல்-குமுளி அகல ரயில்பாத திட்ட போராட்டக்குழு தலைவர் சங்கரநாராயணன் கூறியதாவது: தேனி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான திண்டுக்கல்-லோயர்கேம்ப் ரயில்பாதை திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. 2012ம் ஆண்டு ரயில்வே துறையினரால் திட்டமதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், பணிகள் தொடங்கப்படவில்லை. இப்பணியை துவக்க வலியுறுத்தி திண்டுக்கல்-குமுளி அகல ரயில்பாதைத் திட்ட போராட்டக்குழு பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. தற்போது மதுரை-போடி மீட்டர் கேஜ் ரயில்பாதை அகலரயில் பாதையாக மாற்றப்பட்டு இப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், திண்டுக்கல்-லோயர்கேம்ப் திட்டத்தை திண்டுக்கல்-சபரிமலை அகல ரயில்பாதைத் திட்டம் என மத்திய அரசு விரிவாக்கம் செய்துள்ளது. இத்திட்டத்திற்கு மாநில அரசின் நிதி பங்களிப்பு மிகவும் முக்கியம். எனவே, திண்டுக்கல்-சபரிமலை ரயில்திட்டத்தை நிறைவேற்ற மூன்று திட்டங்களாக பிரித்து செயல்படுத்த வேண்டும். போடி-லோயர்கேம்ப் ரயில்பாதை எனவும், தேனி-திண்டுக்கல் ரயில்பாதை எனவும், லோயர்கேம்ப் சபரிமலை ரயில்பாதை என மூன்று கட்டங்களாக நிறைவேற்ற வேண்டும். முதல்கட்டமாக போடி-லோயர்கேம்ப் திட்டத்தை உடனே துவக்க வேண்டும். இதற்கான நிதிபங்களிப்பை மாநில அரசு ஒதுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.