பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்காமல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற நிகழ்ச்சியை புறக்கணிப்பதா?: மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி

சென்னை: பட்ெஜட் மீதான விவாதத்தின் ேபாது நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியதாவது: பட்ஜெட் மீதான விவாதம் நடக்கும்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இல்லை. இது நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களை அவமதிக்கும் செயலாகும். மக்களவையில் இருக்க வேண்டிய நிதியமைச்சர், அதற்கு பதிலாக இந்தியா டூடே நடத்தும் நிகழ்வில் பங்கேற்று இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம், அவர் நியமன உறுப்பினராக இருப்பதால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய மக்களவைக்கு மதிப்பு தரவில்லை. பத்திரிகையாளர்களை சந்திப்பதற்காக நிதியமைச்சர் தன் பட்ெஜட் உரையை குறுகிய நேரத்தில் முடித்து இருக்கலாம். நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட் இந்திய ஒன்றியத்துக்கு எதிரானது; மக்களுக்கு எதிரானது. அதுமட்டுமில்லாமல் ஒன்றிய அரசு முழுவதுமாக மக்களின் நலனை இந்த பட்ஜெட்டில் புறக்கணித்துள்ளது. நிதியமைச்சர் தன் உரையின்போது வரிச்செலுத்தும் மக்களுக்கு நன்றி கூறினார். அதற்கு என்ன அர்த்தம், நான் வரிச்செலுத்துபவர்களாக எந்த வரி மாற்றத்தையும் செய்ய மாட்டேன். கடைசி வரை இதே வரியையே நீங்கள் செலுத்த வேண்டும். கொரோனா காலத்திலும் உங்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆனால் நீங்கள் வரியை மட்டும் செலுத்துங்கள். கடந்த இரண்டு ஆண்டுகளும் நடுத்தர மக்களுக்கு மோசமானவையாக இருந்தது. அவர்களுக்கு எந்த பலனுமே கிடைக்கவில்லை. வெற்று வாக்குறுதிகளை மட்டுமே வழங்கினார்கள். ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடப்பதால், விவசாயிகளை கவரும் வகையில் விவசாயிகளுக்கு அதிகளவு மானியம் வழங்குவதாக நினைக்க தோன்றுகிறது. நான் இந்த அரசை கேட்பது, 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரண்டு மடங்கு ஆகும் என்று சொன்னீர்கள். அது எப்போது நிறைவேறும் என்பதை காண நாங்கள் காத்திருக்கிறோம்.விவசாயிகளுக்கு நலனுக்கான எந்த திட்டமோ அல்லது இழப்பீடோ விவசாயிகளுக்கு அறிவிக்கப்படவில்லை. இந்தியாவின் தலைநகருக்கு அருகே மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடினர். இதில் பலர் இறந்தனர். ஆனால், அது குறித்து விவரங்களை கேட்டால், எங்களிடம் விவசாயிகள் இறப்பு குறித்த எந்த தரவுகளும் இல்லை என்று ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் பதில் அளிக்கிறது. ஒன்றிய அரசின் இந்த பதில் எங்களுக்கு அதிர்ச்சி அளித்தாலும், எங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை. புலம்பெயர் தொழிலாளர்கள் கொரோனா காலத்தில் தங்கள் வேலைகளையும், உயிரையும் இழந்தனர். அது குறித்த எந்த தரவுகளும் ஒன்றிய அரசிடம் கேட்டால் இல்லை என்கிறார்கள். அதேபோல கொரோனா காலத்தில் முன்களப்பணியாளர்கள் பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். அது குறித்த விவரங்களை கேட்டால் ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் தங்களிடம் அது குறித்த புள்ளிவிவரங்கள் இல்லை என்ற கூறுகிறார். 2011ல் எடுக்கப்பட்ட சாதிவாரிய கணக்கெடுப்பு தரவுகளை கேட்டால், அதுவும் இல்லை என்கிறார்கள். ஆனால், உங்களுக்கு பொருளாதார மறுகட்டமைப்பு தேவையென்றால், எந்த வித தரவுகளோ, புள்ளி விவரங்களே இல்லாமல் மசோதாவை பாஸ் செய்துவிடுகிறீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.