விமர்சனங்களை எதிர்கொள்ள நான் எப்போதும் தயங்கியதில்லை -முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டின் அனைத்து மக்களுக்குமான உரிமைகளை உறுதியாக நிலைநாட்டும் நமது இலட்சியப் பயணத்தின் வெற்றி, மக்களிடம் செல்லுங்கள்; மகத்தான வெற்றியை அவர்கள் மனமுவந்து தருவார்கள் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

அந்த மடலில் அவர் கூறியுள்ளதாவது,

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

நல்லாட்சி வழங்கி வரும் தி.மு. கழக அரசின் திட்டங்கள் உள்ளாட்சிவரை படிநிலைகளின் வழியே ஊடுருவிச் சென்று, ஒவ்வொரு ஊரிலும், அதில் உள்ள ஒவ்வொரு தெருவிலும், அங்கே வாழ்ந்துவரும் ஒவ்வொரு குடும்பத்திலும், அந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் பயன்பெற்று மகிழ்ந்திட வேண்டும் என்ற உன்னத நோக்கமே, நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் நமக்கான இலக்காகும். கழக வேட்பாளர்களும், தோழமைக் கட்சி வேட்பாளர்களும், ஒவ்வொரு வாக்காளரையும் தவறாமல் நேரில் சந்தித்து, வேண்டுகோள் விடுத்து, தங்கள் வெற்றியை உறுதிசெய்யும் விளக்கப் பரப்புரையை மேற்கொள்கின்ற நேரம் இது.

வேட்பாளர்களையும், அவர்களுக்காக அரும்பாடுபடுகிற உடன்பிறப்புகளையும், வெற்றியை மனமுவந்து வாரி வழங்கவிருக்கிற வாக்காளர்களையும், உங்களுடன் இணைந்து நானும் நேரில் சந்திக்கவே பெரிதும் விரும்புகிறேன். முதலமைச்சர் என்ற பொறுப்பை இதே வாக்காளர்கள்தான் கடந்த ஆண்டு மே மாதம் என்னை நம்பி, உளப்பூர்வமாக ஒப்படைத்தார்கள். அவர்கள் வைத்த நம்பிக்கை, ஒரு நாளும் ஒரு சிறிதும் வீணாகாதபடி, ஒட்டுமொத்த ஆற்றலையும் பயன்படுத்தி தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். நிறைவேற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளன.

கொரோனா இரண்டாவது அலையிலிருந்து மக்களைக் கண்ணை இமை காப்பது போல் காத்த நமது அரசு, மூன்றாவது அலையையும் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. அது மேலும் பரவாமல் இருப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளைக் காக்க வேண்டிய கடமை முதலமைச்சர் என்ற பொறுப்பில் உள்ள எனக்குக் கூடுதலாகவே இருக்கிறது.

எந்தவொரு ஆக்கப்பூர்வமான – பொறுப்பான விமர்சனத்தையும் முன்வைக்க முடியாத எதிர்க்கட்சியினர், ஈரைப் பேனாக்கி இட்டுக் கட்டும் வேலையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். வெறும் வாயையே மென்று சுகம் காணும் அவர்களுக்கு, வெல்லமும் அவலும் கலந்து வாயில் போட்டது போலாகிவிடும் என்பதே என் எண்ணம்.

விமர்சனங்களை நேரடியாக எதிர்கொள்ள எப்போதும் நான் தயங்கியதில்லை. உங்களில் ஒருவனான என் மீது, சட்டமன்றத் தேர்தல் களத்திலும், அதற்கு முன்பும், என்னென்ன விமர்சனங்களை வைத்தார்கள் என்பதை உடன்பிறப்புகளாகிய நீங்கள் நன்றாகவே அறிவீர்கள். அவர்களின் விமர்சனங்களுக்கு, நம்முடைய சீரிய செயல்பாடுகளால், செம்மையான பதிலடி தர வேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். 

அதனால், நேரடிப் பரப்புரை நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, காணொலிப் பரப்புரைக் கூட்டங்கள் வாயிலாக, உடன்பிறப்புகள் மற்றும் வாக்காளர்களின் ஒளிமுகம் கண்டு, அகம் மிக மகிழ்கிறேன்.

நான் கூறிய கருத்துரைகளை உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

மலையளவு பொய்யாக இருந்தாலும், அதை உடைக்க உண்மை ஒன்றே போதும். காற்றேற்றப்பட்ட பலூன், கண்ணுக்குத் தெரியாத குண்டூசி குத்தினாலே, உருத் தெரியாமல் சிதறிவிடும் அல்லவா! நீங்கள் உண்மைகளை மக்களிடம், உரிய வகையில் எடுத்துச் சொன்னாலே போதும். 

எதிரணியினர் நம்மை கோபப்படுத்துவார்கள்; ஆத்திரப்படுத்துவார்கள். அதற்கு நாம் எதிர்வினையாற்ற வேண்டும் என்பதுதான் அவர்கள் எதிர்பார்ப்பது! அவர்கள் போல நாம், தரம் தாழ்ந்து, நிலை தடுமாறி, நடந்து கொள்ளவும் முடியாது. 

வெறும் கரண்டி பிடித்துள்ளவன், கையை எப்படி வேண்டுமானாலும் சுழற்றலாம். ஆனால், எண்ணெய் கரண்டியை கையில் வைத்துள்ள நாம் அந்த மாதிரி சுழற்ற முடியாது; மீறிச் சுழற்றினால், எண்ணெய் கீழே கொட்டிவிடும். ஆட்சியில், வெகுமக்கள் வழங்கிய அதிகாரத்தில் நாம் இருப்பதால், அவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு, கீழே இறங்கி தெருச்சண்டை போடவும் முடியாது; லாவணி பாடவும் முடியாது. இதை நீங்கள் எப்போதும் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

சாதியைச் சொல்லித் திட்டுவார்கள்; மதத்தை வைத்து இழிவு படுத்துவார்கள். பெண்களாக இருந்தால் ஆபாசமாகப் பேசுவார்கள். நமது குடும்பத்தை குறைத்துரைப்பார்கள். அதுதான் அவர்கள் பின்பற்றும் அரைகுறைப் பண்பாடு. ‘வாழ்க வசவாளர்கள்’ என்கிற நமது வழக்கமான அடிப்படையில்தான், நாம் நிச்சயம் செயல்படவேண்டும். இதுதான் நம் பண்பாடு, பார் போற்றும் நம் குணம்.

பதில் சொல்கிறோம் என்று நினைத்துக் கொண்டு, புதுப் பிரச்சினையை உருவாக்கிவிடக் கூடாது. எடுத்துரைப்பதற்கு நம்மிடம் ஏராளமான சாதனைகள் இருக்கின்றன. பெருமையோடுப் பேசுவதற்கு நம்மிடம் பீடுடைய வரலாறு இருக்கிறது. நாடும், ஏடும் போற்றும் நமது முன்னோடியான தலைவர்கள், அரிய ஆளுமைகள் – இலட்சிய வேட்கை மிக்கவர்கள் – அதற்காகப் பல வகையிலும் தியாகங்களைச் செய்தவர்கள். இதைத் தக்கபடி எடுத்துச் சொன்னாலே போதும். எக்காரணம் கொண்டும் தேவையில்லாததைச் சொல்ல வேண்டாம்.

மக்கள் பணியே மகேசன் பணியெனக் கொண்டு, நாள்தோறும் உழைத்து வருவதைக் கண்டு உணர்ந்திருக்கும் மக்கள், ஒருபோதும் எதிர்க்கட்சியினரின் திட்டமிட்ட பொய்ப் பரப்புரை எனும் மாய வலையில் விழ மாட்டார்கள். நம் பக்கமே அவர்கள் நம்பிக்கையுடன் இருப்பார்கள். நாம் என்றும் அவர்கள் பக்கம் அக்கறையுடன் இருப்போம்.

ஆட்சி – அதிகாரம் – பதவி அனைத்தையுமே, சமூகநீதி எனும் சாலச் சிறந்த இலட்சியத்தை நிறைவேற்றுவதற்குத் தக்க கருவியாகக் கருதுகிற இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். தேர்தல் களத்தில் பெறுகின்ற வெற்றியும்கூட, நம் இலட்சியப் பாதைக்கான வெளிச்ச விளக்குகள்தான்.

கூடுதல் கவனத்துடன் பாடுபட்டு வளர்த்தெடுத்த சமூகநீதியை வெட்டிச் சாய்க்க வெறிகொண்டு துடிக்கும் நீட் எனும் கொடுவாளை ஏந்தியிருக்கும் எதேச்சாதிகாரத்தின் கரங்களை சட்டரீதியாக ஒடுக்குவதில் சமரசமற்ற அகிம்சைப் போரினைத் தொடங்கியுள்ளோம். பிப்ரவரி 8-ஆம் நாள் கூட்டப்படும் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தின் நோக்கமும், அதில் நிறைவேற இருக்கிற தீர்மானமும், கடைக்கோடித் தமிழ் மாணவருக்கு எட்டாக் கனியாக இருக்கும் மருத்துவக் கல்வி வாய்ப்பு கிட்ட வேண்டும் என்பதுதான்! அதனையும் கருத்தில் வைத்தே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான காணொலிப் பரப்புரைகளில் பங்கேற்கிறேன்.

தமிழ்நாட்டின் அனைத்து மக்களுக்குமான உரிமைகளை உறுதியாக நிலைநாட்டும் நமது இலட்சியப் பயணத்தின் வெற்றி, மக்களிடம் செல்லுங்கள்; மகத்தான வெற்றியை அவர்கள் மனமுவந்து தருவார்கள். 

இவ்வாறு தனது மடலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.