வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் விவகாரம்; சிபிசிஐடி விசாரணை நிலை குறித்த அறிக்கை தர உத்தரவு

புதுடெல்லி: வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் மரணம் தொடர்பான விவகாரத்தில் விசாரணையின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக சிபிசிஐடி போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாநகர் மேற்கு தங்கம் காலனியைச் சேர்ந்தவர் சங்கரசுப்பு. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவரது மகன் சதீஷ்குமார்(24). இவர் கடந்த 2011ல் மாயமானார். அவரது உடல் அதே ஆண்டு ஜூலை 13ம் தேதி சென்னை ஐ.சி.எப் வடக்கு காலனி ஏரியில் மீட்கப்பட்டது. சதீஷ்குமாரின் சட்டை பாக்கெட்டில் இரண்டு பிளேடுகள் மற்றும் கழுத்தில் நான்கு வெட்டுக் காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். சதீஷ்குமார் மரணம் குறித்து முதலாவதாக விசாரித்த சி.பி.ஐ அதனை தற்கொலை என முடிவு செய்தது. ஆனால், சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கொலை என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதனால் சதீஷ்குமார் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்ற மர்மம் நீடித்து வந்த நிலையில், இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு சிபிசிஐடி வசம் நிலுவையில் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சங்கரசுப்பு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பசந்த் மற்றும் ராகுல் ஷியாம் பண்டாரி ஆகியோர், ‘‘சதீஷ்குமார் மரணம் தொடர்பான விவகாரத்தில் சிபிசிஐடி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து எந்த ஒரு அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை. இதனால் வழக்கு எந்த நிலவரத்தில் இருக்கிறது என்ற விவரங்களும் இல்லை. அதனால் வழக்கு விசாரணை நியாயமாக நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது’’ என தெரிவித்தனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தமிழக சிபிசிஐடி போலீசார் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய நேற்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.