ஏன் தமிழகம் தொடர்ந்து நீட் தேர்வை எதிர்கிறது? நீட் வேண்டுமா? வேண்டாமா? ஓர் அலசல்

மத்திய அரசு நடைமுறைப்படுத்தியிருக்கும் நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டுமென தமிழ்நாடு தீவிரமாக களமாடி வருகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக தேர்தல் பரப்புரையில் பேசிய தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நீட் தேர்விலிருந்து நிச்சயம் தமிழ்நாட்டுக்கு விடுதலை கிடைக்கும் என உறுதியளித்தார்.

இந்தச் சூழலில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக (பாஜக தவிர்த்து) தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு ஆளுநராக கடந்த வருடம் செப்டம்பர் 18 ஆம் தேதி ஆர்.என். ரவி பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை நேரில் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் நீட் விலக்கு மசோதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

இதற்கிடையே நீட் தேர்வு குறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்தது. அதன்படி நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம். ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். நீட் தேர்வு ரத்துக்கு சட்டம் இயற்றுவதன் மூலம் மருத்து மாணவர் சேர்க்கையில் சமூக நீதி உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ALSO READ | நீட் விலக்கு விவகாரம்: அதிமுக மீது அவதூறு பரப்புவதா? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

தமிழ்நாடு அரசு அமைத்த குழு கொடுத்த அறிக்கை இப்படி இருக்க, கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர், ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்களை நீட் தேர்வு காக்கிறது. நீட் தேர்வு சமூக நீதியை உறுதிப்படுத்துகிறது என்று தனது விளக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து கடந்த பிப்ரவரி ஐந்தாம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கே அனுப்பப்பட்டது. ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு அவருக்கே திருப்பி அனுப்பப்படுவது தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

முன்னதாக, நீட் தேர்வுக்கு எதிராக அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அதனையடுத்து நீட்டுக்கு எதிரான போராட்டத்தை தமிழ்நாடு எந்தவித சமரசமுமின்றி நடத்தி வருகிறது. அந்தவகையில் கடந்த அதிமுக ஆட்சியிலும் நீட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதனை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பிவைத்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

நீட் வேண்டுமா? வேண்டாமா?

நீட் தேர்வின் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவர முடியும், மருத்துவம் வியாபாரம் ஆகாது என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

ஆனால் இந்தியாவில் பல மொழிகள் பேசும் மக்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்திற்கென்று தனி கலாசாரம், பண்பாடு, கல்வி முறை ஆகியவை இருக்கின்றன. எனவே அந்தந்த மாநில மாணவர்கள் மாநில கல்வி முறையையே பயின்றுவருகின்றனர்.

நீட் தேர்வோ மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது. எனவே மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்களுக்கு நிச்சயம் இந்தத் தேர்வு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

ALSO READ | நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களை ஒருங்கிணைக்க தமிழக அரசு முடிவு

மேலும், 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு கறார் காட்டியது. அந்த வருடம் நடந்த நீட் தேர்வில் இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே தேர்வு நடத்தப்படுமென மத்திய அரசு முதலில் அறிவித்தது. அதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பத்து மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது. அப்போதும்கூட இந்தி வினாத்தாளும், ஆங்கில வினாத்தாளும் எளிதாக இருந்ததாகவும், பெங்காலி மொழியில் தேர்வு எழுதியவர்களும், ஆங்கில வினாத்தாளைவிட தமிழ் வினாத்தாள் எளிதாக இருந்ததாக ஆங்கிலத்தில் தேர்வெழுதிய மாணவர்களும் குற்றஞ்சாட்டியிருந்தனர். இப்படி வினாத்தாள்களில்கூட ஏற்றத்தாழ்வு இருக்கும் நீட் எப்படி சமூக நீதியை நிலைநாட்டுமென நீட் எதிர்ப்பாளர்கள் முன்வைக்கின்றனர்.

ஆனால் ஆரம்பத்தில் நீட் தேர்வில் சில சிக்கல்கள் இருந்தது உண்மைதான் என்றாலும் தற்போது அது எல்லாம் களையப்பட்டுவிட்டதாக நீட் ஆதரவாளர்கள் கூறினாலும், இந்தியாவில் இன்னும் வளராத கிராமத்தில் வளரும் மாணவர்கள், மாணவிகள் தங்களின் அன்றாட செலவுகளுக்கே தடுமாறும் சூழலில் எப்படி அவர்களால் தனியாக நீட் பயிற்சி மையத்துக்கு சென்று செலவு செய்து படிக்க முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

ஆளுநருக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

ஒரு மாநிலத்தில் நிறைவேற்றப்படும் சட்டம் அந்த மாநிலத்திற்கு நன்மை பயக்குமா இல்லை தீமை செய்யுமா என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் அந்த மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்குத்தான் இருக்கிறதே ஒழிய ஆளுநருக்கு இல்லை. மசோதாவில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதை விளங்கிக்கொள்ளலாமே தவிர அதை நிராகரிக்கும் உரிமை அவருக்கு இல்லை.

ALSO READ | NEET: நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் தமிழக ஆளுநர்

ஆளுநர் என்பவர் யூனியன் பிரதேசம் அல்லாத மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் ஒரு பாலம் போல் செயல்படவேண்டுமே தவிர தன்னிச்சையாக முடிவெடுக்கு அதிகாரம் அவருக்கு இல்லை. தற்போதைய ஆளுநர் ரவிக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது யார். அப்படி அவர் தன்னிச்சையாக முடிவெடுக்க அரசியலமைப்பு சட்டப்படி அவருக்கு இல்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

மேலும் 98 விழுக்காடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதன் மூலம் அவர் தமிழ்நாடு சட்டப்பேரவையை மட்டுமின்றி தமிழக மக்களின் உணர்வையும் மதிக்க தவறிவிட்டார் எனவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி “ஆட்டுக்கு தாடி எதற்கு நாட்டுக்கு ஆளுநர் எதற்கு” என்ற பேரறிஞர் அண்ணாவின் வாதம் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிக்கொண்டே இருக்கிறது எனவும் சமூக வலைதளங்களில் பதிவுகள் தென்படுகின்றன.

இப்படிப்பட்ட சூழலில் இந்திரா காந்தி காலத்தில் பொதுப்பட்டியலுக்கு கொண்டுவரப்பட்ட கல்வியானது மாநில பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மாநில பட்டியலுக்கு கல்வி கொண்டுவரப்பட்டால் தான் கல்வியில் சமூக நீதி காக்கப்படுமெனவும் சமூக செயற்பாட்டாளர்களும், கல்வியாளர்களும் கூறுகின்றனர்.

எது எப்படியோ மாணவர்களின் நலனும், அவர்களின் வளமான எதிர்காலமும்தான் கல்வி முறையிலும், தேர்வு முறையிலும் அவசியம் என்பதால் அதனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ALSO READ | நீட் தேர்வில் இருந்து விலக்கு தொடர்பாக பாஜக தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.