தமிழக மீனவர்கள் கைது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். அத்துடன் அவர்களின் மூன்று விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளதாவது:

வங்கக் கடலில் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது!

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 21 பேர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, அவர்களின் காவல் 21-ஆம் தேதி வரை நேற்று நீட்டிக்கப்பட்டு உள்ளது! தமிழ்நாட்டின் எதிர்ப்புகளை மீறி தமிழக மீனவர்களின் 135 படகுகள் நேற்று ஏலம் விடப்பட்டுள்ளன.

‘வாரிசு அரசியலால் ஜனநாயகத்திற்கு ஆபத்து!’ – காங்கிரசை துவம்சம் செய்த மோடி!

இரண்டாவது நாளாக இன்றும் படகுகள் ஏலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் 16 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது இந்திய இறையாண்மை மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல் ஆகும்! இந்திய – இலங்கை மீனவர் சிக்கலுக்கு சுமூகத் தீர்வு காணப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சரிடம் இலங்கை அமைச்சர் உறுதியளித்த ஒரு சில மணி நேரங்களில்
தமிழக மீனவர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர் என்பதிலிருந்தே இந்தியாவை இலங்கை எவ்வாறு அவமதிக்கிறது என்பதை உணரலாம்!

இப்போது கைது செய்யப்பட்ட 16 பேர், ஏற்கனவே கைது செய்யப்பட்ட 21 பேர் என 37 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். படகுகள் ஏலத்தை தடுத்து நிறுத்தி அவற்றையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.