தமிழக மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு; இலங்கை மீண்டும் அட்டூழியம்

ராமேஸ்வரம்: பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் படகுகளுடன் சிறை பிடித்து சென்றனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக்ஜலசந்தி கடலுக்கு சென்றனர். இவர்களில் சிலர் நேற்று இரவில் கச்சத்தீவுக்கு வடக்கு கடல் பகுதியில் வழக்கம் போல் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை வழிமறித்து, அக்கடல் பகுதியில் இருந்து வெளியேறுமாறு எச்சரித்து விரட்டியடித்துள்ளனர். தொடர்ந்து தங்கச்சிமடம் மீனவர் மணிகண்டன், சேவியர், ராபின் ஆகியோருக்கு சொந்தமான மூன்று விசைப்படகுகளில் இருந்த தங்கதுரை, லிங்கம், ஜெயகிருஷ்ணன், மணிகண்டன், செந்தூர்பாண்டி, ரமேஷ், சங்கர், மதியழகன், ராஜா, சிலுவை மற்றும் டிக்ஸன் ஆகிய 11 மீனவர்களை சிறை பிடித்தனர். 3 படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்கள் தங்களது படகுகளை உடனடியாக வேறு பகுதிகளுக்கு ஓட்டிச் சென்றனர். இன்று காலை கரை திரும்பிய அவர்களது படகுகளில் மீன்வரத்து மிகவும் குறைவாக இருந்தது. கடற்படையினரின் சிறைப்பிடிப்பு நடவடிக்கையால் இரவில் மீன்பிடிக்க முடியவில்லை என்று மீனவர்கள் வேதனை தெரிவித்தனர். இதனிடையே கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 11 மீனவர்களும் இரவோடு இரவாக இலங்கை மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இன்று காலை மீனவர்கள் 11 பேரிடமும் இலங்கை கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 135 படகுகள், நேற்று இலங்கை அதிகாரிகளால் ஏலம் விடப்பட்ட சம்பவம், ஏற்கனவே தமிழக மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மீனவர்கள் 11 கைது செய்யப்பட்ட சம்பவத்தால், ராமேஸ்வரம் பகுதி மக்கள் வேதனையில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.