தென்காசி காசி விசுவநாத சுவாமி திருக்கோவில் மாசி மகப்பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.!

தென்காசி: தென்காசி காசி விசுவநாத சுவாமி திருக்கோவிலில் மாசி மகப்பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தென்காசி காசி விசுவநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகப் பெருவிழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார, தீபாராதனைகள் நடந்தது. கொடியை கைலாச பட்டர், முத்துக்கிருஷ்ணன் பட்டர், செந்தில் பட்டர் ஆகியோர் நடத்தி வைத்தனர். இதில் கோவில் மணியம் செந்தில்குமார், முன்னாள் எம்எல்ஏ வேங்கடரமணன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் இலஞ்சி அன்னையாபாண்டியன், முன்னாள் கவுன்சிலர் இசக்கி, பாஜக மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், சங்கர சுப்பிரமணியன், கருப்பசாமி, ராஜ்குமார், அதிமுக சுப்புராஜ், கூட்டுறவு மாரிமுத்து, சாமி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் தினமும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படியை முன்னிட்டு காலை, மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனைகள், சுவாமி அம்பாள் வீதி உலா நடக்கிறது. வரும் 16ம்தேதி தேரோட்டம் நடக்கிறது.  முதலில் சுவாமி தேரும், பின்னர் அம்பாள் தேரும் ஒன்றன்பின் ஒன்றாக இழுக்கப்படுகிறது. அன்று காலை 5.40 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் சுவாமி அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளல், 9.05 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 17ம்தேதி மாசி மகப் பெருவிழாவை முன்னிட்டு காலையில் தீர்த்தவாரி, மாலையில் புஷ்பாஞ்சலி நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர்கள் சங்கர், கோமதி, செயல் அலுவலர் சுசீலா ராணி, ஆய்வர் சரவணக்குமார் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.