தொடர்ந்து அத்துமீறல்: எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக 16 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!!

கொழும்பு : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து இருப்பது மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து 2 படகுகளில் கடலுக்கு சென்ற 21 மீனவர்கள், கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்தும் பேசப்பட்டதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 16 தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. அவர்களின் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை. இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.