புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பேக்கரி கடையில் பணத்தை திருடிய கொள்ளையன் போலீசாரிடம் சிக்காமல் இருக்க சிசிடிவி கேமராவையும், கணினியையும் திருடிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே தனியார் பேக்கரி கடை ஒன்று இயங்கி வருகிறது. கடையின் உரிமையாளர் வழக்கம்போல் வியாபாரம் செய்வதற்காக கடையை திறந்த போது பூட்டு உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனை தொடர்ந்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஆராய முற்பட்டபோது சிசிடிவி கேமராவும் கணினியும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மற்றொரு சிசிடிவி காட்சி அடங்கிய தொகுப்பினை கைப்பற்றிய போலீசார் அதனை காட்சிப்படுத்தி ஆராய்ந்தபோது, அதில் கொள்ளையன் திருடிய காட்சி பதிவாகி இருந்தது. அதனை தொடர்ந்து மாயமான கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
