மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே பழுதான பழைய மேம்பாலம் சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 10 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், மதுராந்தகம் ஒன்றியத்துக்கு இடையே வாகன போக்குவரத்திற்காக 60 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. அந்த மேம்பாலத்தின் வழியாகத்தான் சென்னை- திருச்சி மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் வாகன போக்குவரத்து மிக அதிகமானதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இந்த மேம்பாலத்தை கடந்து செல்வது என்பதே பயணிகளுக்கு சவாலாக இருந்தது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைத்து எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் இந்த மேம்பாலத்தின் அருகிலேயே 30 ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு பாலம் கட்டப்பட்டது. இதனால் திருச்சியில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் பழைய மேம்பாலத்தின் வழியாகவும், சென்னையில் இருந்து திருச்சி வழியாக செல்லும் வாகனங்கள் புதிய மேம்பாலத்தின் வழியாகவும் அனுமதிக்கப்பட்டு வந்தன. எந்தவித போக்குவரத்து நெரிசலும் இன்றி பொதுமக்கள் சீராக பயணம் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடந்த தொடர் மழையின் காரணமாக பழைய மேம்பாலம் பாதிக்கப்பட்டது. சுமார் 1 கிமீ நீளத்திற்கு உள்ள இந்த பாலத்தின் மேல் பகுதியில் சாலைகள் ஆங்காங்கே பெயர்ந்து தண்ணீர் தேங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமத்தோடு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே இந்த பாலத்தை சீரமைக்க நெடுஞ்சாலை துறை முடிவு செய்தது. அதன்படி இதற்கான பணி நேற்று தொடங்கியது. இதனால் அந்த பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் இருந்து திருச்சி வழியாக வரும் அனைத்து வாகனங்களும் புதிய மேம்பாலத்தில் இயக்கப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 10 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் ஊர்ந்து செல்கிறது. பழுதான பழைய மேம்பால பணிகள் முடிவடைய 40 நாட்களாகும் என்று கூறப்படுகிறது. அதனால் இந்த 40 நாட்களும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் பயணிக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாற்று வழியில் பயணம் செய்ய நெடுஞ்சாலை துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன் வழியாக பயணிகள் சென்று வருகின்றனர்.
