ராமநாதபுரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 11 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். நேற்று முன்தினம் கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 3 விசைப்படகுகளையும் அதில் இருந்த 11 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். இது தொடர்பாக நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 800க்கும் மேல் விசைப்படகுகளை இயக்காமல் நிறுத்தி வைத்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை இன்று முதல் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே இலங்கை கடற்படையில் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்த போராட்டத்தால் நாளொன்றுக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி நாளை மறுநாள் ராமேஸ்வரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தவும் மீனவர் அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
