கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதியை ஒட்டியே அமைந்துள்ளது. சமீப காலமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதி, தேயிலை தோட்டங்கள், சாலை பகுதிகளில் கரடி, காட்டு மாடு, சிறுத்தை, காட்டு யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு கொடநாடு எஸ்டேட் அருகே உள்ள காந்தி நகர் பகுதியில் 2 புலிகள் உலா வந்துள்ளது. இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் செல்போனில் பதிவு செய்து உள்ளனர். ஒரே இடத்தில் 2 புலிகள் உலா வந்தது அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புலிகளை கூண்டு வைத்து பிடிக்கவோ அல்லது மயக்க ஊசி செலுத்தியோ பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
