தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்.. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29 தமிழக மீனவர்களையும், அவர்களது 79 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டுமென்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர்
மு.க.ஸ்டாலின்
இன்று (8-2-2022) மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் கடந்த சில வாரங்களுக்குள் அப்பாவி இந்திய மீனவர்கள் மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டிருப்பதை பிரதமர் மோடியின் தனிப்பட்ட கவனத்திற்குக் கொண்டுவருவதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், இச்சம்பவம் தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 7 அன்று, மூன்று மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 11 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து, இலங்கை மயிலாட்டி கடற்படைத் தளத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்பாவி மீனவர்கள் மீண்டும் மீண்டும் இதுபோன்று கைது செய்யப்படுவது குறித்து பலமுறை ஒன்றிய அரசிடம் முறையிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தற்போது கைது செய்யப்பட்டுள்ள 11 மீனவர்களையும் சேர்த்து, இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த 29 மீனவர்கள் இலங்கைக் காவலில் உள்ளனர் என்றும் 79 மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசின் வசம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் நீட் விலக்கு மசோதா: கவர்னருக்கு செக் வைத்த முதல்வர்!

மேலும், இரு நாட்டு மீனவர்களிடையே நிலவும் பதட்டமான நிலைமை, இலங்கை அரசால் தமிழ்நாடு மீன்பிடிப் படகுகளை ஒருதலைபட்சமாக ஏலம் விடுவது மற்றும் இலங்கையைச் சார்ந்த சிலரால் நமது மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் தொடர்பான சில தீவிரமான பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டி, சமீபத்தில் பிரதமருக்கு தான் கடிதம் எழுதியிருந்ததையும் முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனது தொடர்ச்சியான கோரிக்கைகள்,
தமிழக மீனவர்கள்
தங்களது பாரம்பரிய கடல் பகுதிகளில் மீன்பிடிப்பதற்கு ஏற்றதொரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும் என்று தான் நம்பியதாகவும், துரதிருஷ்டவசமாக, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைகள் இதுவரை குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் குறிப்பிட்டு, இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு கண்டிட தூதரக அளவில் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் இதுபோன்று இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படும் எண்ணற்ற நிகழ்வுகளைத் தடுத்திட இந்திய அரசின் உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும் என்றும், தமிழக மீனவர்கள் அடிக்கடி துன்புறுத்தப்படுவதும், இதுபோன்று கைது செய்யப்படுவதும், பாக் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கும் அவர்களது பாரம்பரிய உரிமையைப் பறிப்பதாகும் என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், இது நமது ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மட்டுமல்லாமல், கடலில் தமிழக மீனவர்களின் உயிருக்குத் தொடர்ச்சியான அச்சுறுத்தலுடன், பாரம்பரிய கடல் பகுதியில் மீன் பிடிக்கும் அவர்களின் உரிமைக்கு சவால் விடுவது போன்றதாகும் என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீபகாலமாக நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகள், அப்பகுதியின் சமூக மற்றும் அரசியல் மட்டத்தில் மாறுதல்களை ஏற்படுத்தி வருவதால், இப்பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு காண தூதரக முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின்,
பிரதமர் மோடி
உடனடியாகத் தலையிட்டு, இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 29 மீனவர்களையும், அவர்களது 79 மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.