திருப்பூர்: திருப்பூரில் கொலை செய்யப்பட்டு சூட்கேசில் அடைத்து வீசப்பட்ட பெண் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. திருப்பூர், தாராபுரம் ரோடு எம்.புதுப்பாளையம் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் கடந்த 7ம் தேதி சூட்கேசில் பெண் சடலம் கைப்பற்றப்பட்டது. விசாரணையில், அந்த பெண் கொலை செய்யப்பட்டு சூட்கேசில் அடைத்து வீசப்பட்டது உறுதியானது. உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை பிடிக்க உதவி கமிஷனர் லட்சுமணன் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த பெண்ணின் கையில் ஏ குயின் என டாட்டூ பொறிக்கப்பட்டிருந்தது. அதை வைத்தும், பெண்ணின் புகைப்படத்தை வைத்தும் விசாரித்தனர். அதில் கொலையுண்ட பெண் அசாம் மாநிலத்தை சேர்ந்த நேகா (30) என்பதும், திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் தங்கியிருக்கும் அந்த பெண்ணின் உறவினர்களிடம் போலீசார் விசாரித்தனர். அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் 2 பேர் பைக்கில் சூட்கேசுடன் வருவதும், திரும்பி செல்லும்போது சூட்கேஸ் இல்லாமல் செல்வதும் பதிவாகியிருந்தது. அதே நபர்கள் மங்கலம் ரோடு வழியாக கே.வி.ஆர் நகர் வரை செல்வதும் கேமரா காட்சி மூலம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தனிப்படையினர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
