நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அடுத்த  அத்திமாஞ்சேரிப்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஜி.சாருன், ஜி.எழுலரசு ஆகிய 2 மாணவர்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதனால், பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் கழகம் சார்பில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் தேவசகாயம் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், நீட் தேர்வில் சாதித்த மாணவர்கள் தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இதே நேரத்தில் ஆசிரியர்கள், பெற்றோர் சார்பில் மாணவர்களை வாழ்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில், கொடிவலசா ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா பிரகாசம் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தி பேசினார். இதில் ஒன்றிய குழு உறுப்பினர் முத்துராமன், பெற்றோர் – ஆசிரியர் கழக தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர்கள் நெடுஞ்செழியன், ரவி, கதிரவன், பி.டி.சந்திரன், கங்கன், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.