பறக்கும் படையினரால் இதுவரை ரூ.16.50 லட்சம் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அமைக்கப்பட்ட தேர்தல் பறக்கும் படை குழுவினரால் இதுவரையில் ரூ.16.50 லட்சம் வரையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி – 1, நகராட்சிகள் – 6, பேரூராட்சிகள் – 8 ஆகியவைகளில் உள்ள 318 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பணம் மற்றும் பரிசு பொருள்கள் கொடுப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் 46 தேர்தல் பறக்கும் படைகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் முக்கிய இடங்களில் வரும் வாகனங்களை சோதனையிட்டு வருகின்றனர். இதேபோல், திருவள்ளுர் மாவட்டத்தில் பறக்கும் படைகள் மூலம் வாகன தணிக்கை மேற்கொண்டதில் உரிய ஆவணங்கள் இன்றி திருவள்ளுர் நகராட்சியில் கொண்டு சென்ற ரூ. 3 லட்சம், பொதட்டூர்பேட்டையில் ரூ. 6 லட்சம் என மொத்தம் ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே இதுவரையில் மாவட்டத்தில் ரூ.16.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் ரூ.3 லட்சம் விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.