அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனியார் குடோனில் பதுக்கிய ரூ.1 கோடி செம்மரம் பறிமுதல்

ஆவடி: அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தனியார் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பு செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை, பட்டரைவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் குடோனில் செம்மர கட்டைகள் பதுக்கிவைத்திருப்பதாக வனத்துறையின் நுண்ணறிவு புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையில், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த குடோன் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில், குடோன் கதவை உடைத்து சென்று பார்த்தபோது உள்ளே சாக்கு மூட்டைகளிலும் அடுக்கியும் ஏராளமான செம்மர கட்டைகள் இருந்தது. இங்கிருந்து சுமார் ஒரு கோடி மதிப்பு செம்மர கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை லாரியில் ஏற்றிச்சென்று சென்னையில் உள்ள வனத்துறை தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதுபற்றி வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து செம்மர கட்டைகள் பதுக்கிவைத்திருந்த குடோன் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.